புட்டினுடனான சந்திப்பு: பைடன் கொள்கை அளவில் இணக்கம்

உக்ரைன் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உச்சிமாநாடு ஒன்றை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்யா அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்தாது என்ற நிலையில் மாத்திரமே பிரான்ஸ் பரிந்துரைத்திருக்கும் இந்த உச்சிமாநாடு இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஐரோப்பாவில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பாதுகாப்பு பிரச்சினைக்கு இந்த சந்திப்பு இராஜதந்திர ரீதியில் தீர்வொன்றை எட்டுவதற்கு சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு ரஷ்யா தயாராகி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியபோதும் ரஷ்யா அதனை மறுத்துள்ளது.

ஜோ பைடனுடன் சுமார் மூன்று மணி நேரம் தொலைபேசியில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் இந்த பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ் இடையிலான சந்திப்பில் இந்த மாநாடு பற்றிய விபரங்கள் பேசப்படும் என்று மெக்ரோன் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் கணிப்பின்படி உக்ரைன் எல்லைக்கு அருகில் 150,000க்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதன்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடி விவகாரத்தில், 'இராஜதந்திர முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க' ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் உக்ரைன் – ரஷ்யா இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்திப்பு நடத்த புட்டின் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் குறித்து மொஸ்கோ தரப்பு கூறுகையில், பதற்றத்தை அதிகரித்ததாக, உக்ரைன் இராணுவம் மீது புட்டின் குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளது.

Tue, 02/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை