உக்ரைன் பதற்றத்தை தணிக்க இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் சூழல் அதிகரித்திருக்கும் நிலையில் இராஜதந்திர நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் நேற்று திங்கட்கிழமை மொஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்தனர்.

மறுபுறம் ஜெர்மனி, செக் குடியரசு, சுலோவாக்கியா மற்றும் ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர்கள் உக்ரைனில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் நாட்டு எல்லைக்கு அருகில் ரஷ்யா 110,000 துருப்புகளை குவித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

பெப்ரவரி நடுப்பகுதியில் முழு அளவிலான ஆக்கிரமிப்பு ஒன்றை நடத்த 150,000 அளவு படைகளை குவித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அளவான படைகள் உக்ரைன் தலைநகர் கீவை 48 மணி நேரத்திற்குள் கைப்பற்ற போதுமானது என்றும் இந்த மோதல் 50,000 பேர் வரை உயிரிழக்கக் காரணமாகக் கூடும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையை ஏற்றிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரொன் நேற்று ரஷ்யாவை சென்றடைந்தார். அவர் இன்று உக்ரைன் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தற்போது ஸ்தம்பித்திருக்கும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் மற்றும் உக்ரைனுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் முயற்சியிலும் மெக்ரோன் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா சென்றிருக்கும் ஜெர்மனி பிரதமர் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு கூறும்போது, 'உக்ரைனில் தலையிட்டால் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற தெளிவான செய்தியை ரஷ்யாவுக்கு வழங்க நாம் கடுமையாக செயற்பட்டு வருகிறோம்' என்றார்.

பதற்றத்தை தணிக்க உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைவதில்லை என்ற உறுதி மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் அங்கத்துவ நாடுகளில் இருந்து நேட்டோ படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது. எனினும் இந்தக் கோரிக்கைகளை அமெரிக்க மற்றும் நோட்டோ நிராகரித்துள்ளன.

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை