உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படையினர் சிலர் வாபஸ்

உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படையினரில் சிலரை வாபஸ் பெற்றதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பாரிய அளவிலான போர் ஒத்திகைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதும் சில பிரிவுகள் தமது முகாமுக்கு திரும்பி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் வாபஸ் பெறப்பட்ட எண்ணிக்கை கூறப்படாததோடு இது தற்போதைய பதற்றத்தை தணிக்கும் என்று உறுதி செய்யப்படவில்லை.

உக்ரைன் எல்லைக்கு அருகில் 100,000க்கு அதிகமான துருப்புகளை குவித்திருந்தபோதும் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

உக்ரைன் எல்லை மாவட்டங்களில் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த துருப்பினரில் சிலர் வாபஸ் பெறப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

'போர் ஒத்திகைகள் உட்பட பல பயிற்சிகளும் திட்டமிடப்பட்டவாறு நடத்தப்பட்டன' என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இகோர் கொனசென்கோவ் தெரிவித்தார். வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி முடிவடையவுள்ள ரஷ்யா மற்றும் பெலாரஸ் இடையிலான பாரிய கூட்டு போர் பயிற்சி போன்ற சில ஒத்திகைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

'மேற்குலகின் பிரசாரங்கள் தோல்வியுற்ற தினமாக 2022 பெப்ரவரி 15 வரலாற்றில் இடம்பெறும். ஒரு சூடு கூட நடத்தப்படாமல் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளார்கள்' என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.

எனினும் பதற்ற சூழலை தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் நேற்றும் நீடித்தது. ஜெர்மனி சான்சலர் ஒலேப் ஸ்கோல்ஸ், நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

​இதேவேளை பெப்ரவரி 16ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று உக்ரைன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

''மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உக்ரைன் ஜனாதிபதி உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,'' என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Wed, 02/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை