'ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை' அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற ரீதியில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த தகவலை அமெரிக்க தரப்பு மறுத்துள்ளது. ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை என்றும் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் கூறுகையில், 'உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். அதற்கான படைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா தயார் நிலையிலேயே வைத்துள்ளது. அமெரிக்கா எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது' என தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்புவது உறுதிபடுத்தப்படவில்லை என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல் நகரில் உள்ள நேட்டோ கூட்டணி அமைப்பு நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்:

ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் பார்ப்பது என்னவென்றால், அவர்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர், மேலும் துருப்புக்கள் வரவுள்ளன.

அவர்கள் உண்மையிலேயே படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கினால், அதை நாங்கள் வரவேற்போம். அவர்கள் எப்போதும் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டிருப்பதால், படைகள், போர் டேங்கிகள் நகர்வுகளைப் பார்க்கிறோம்.

உண்மையான வெளியேற்றத்தை உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 02/18/2022 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை