விசேட சட்டங்களை கொண்டு வந்தேனும் சம்பள அதிகரிப்பு

தொழிலாளர் நலனில் அரசு அக்கறை

தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில், நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை மாற்றமடைய வேண்டும் எனவும் முதலாளிகளுக்கு மாத்திரமன்றி தொழிலாளர்களுக்கும் 4 அல்லது 5 ஏக்கரை ஒதுக்கி அதன் மூலம் கிடைக்கும் கொழுந்தினை தொழிற்சாலைக்கு வழங்கும் நடைமுறை அவசியம் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்யாவிட்டால் பெருந்தோட்டங்களை பாதுகாப்பது சிரமமாக அமைந்துவிடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவற்றைக் கூறினார். தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்,

1000 ரூபா சம்பள பிரச்சினையின் போது, அதனை பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களால் முடியாமற்போனது. தொழிற்சங்கங்கள் பிரிந்து காணப்படுகின்றமையே இதற்கான காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களிடையே காணப்படும் வேற்றுமைகளால் தொழிலாளர்கள் நிர்கதியாகியுள்ள நிலையில், முதலாளிமார் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க தொழில் அமைச்சராலோ அரசாங்கத்தலோ முடியாது. இன்று 85 வீதமான தோட்டங்களில் 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. கிடைக்காத இடங்களும் உள்ளன. தற்போதுள்ள வழக்கு காரணமாக அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது. எனினும், தொழிலாளர்களுக்கான உரிய பிரதிபலன்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். தேவை ஏற்பட்டால் விசேட சட்டம் ஒன்றையாவது பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சம்பளத்தை உறுதிப்படுத்துவோம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

Mon, 02/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை