இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி

நிதியமைச்சர் பசில் விரைவில் இந்தியா பயணம்

 

இந்தியாவிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கைச்சாத்தை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விரைவில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஒரு மில்லியன் டொலர் நிதியை கடன் சலுகையின் கீழ் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான உடன்படிக்கை கைச்சாத்து இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிலிருந்து பெறப்படும் மேற்படி நிதி செலவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதன்போது 2.4 பில்லியன் அமெரிக்கன் டொலரை கடனுதவியாக பெற்றுக்கொள்வதற்கு முடிந்துள்ளது எனவும் அதன் முதற்கட்டமாகவே இந்த ஒரு பில்லியன் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா பல்வேறு வகையில் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. நான் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது அது உறுதிப்பட்டது. இந்தியா 2.4 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதுமட்டுமன்றி நாடு எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடி நிலைமையின் போதும் இந்தியா எமக்கு நிதி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின்போது முதற்தடவையாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை எமக்கு பெற்றுத் தந்ததும் இந்தியாவே. அதேபோன்று பேர்ல் எக்ஸ்பிரஸ் கப்பல் தீ அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை குறைப்பதற்காக இந்தியா மிக விரைவாக எமக்கு உதவியது. இந்தியா மட்டுமன்றி சீனா, பங்களாதேஷ், குவைட் நிதியம், சவுதி நிதியம் போன்ற நாடுகள் மற்றும் நிதியங்கள் எமக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. இது இயல்பாக இடம்பெறக்கூடிய ஒன்றல்ல. இலங்கையின் சிறந்த வெளிநாட்டு கொள்கை காரணமாகவே இந்த உதவிகளும் ஒத்துழைப்புகளும் நாட்டுக்கு கிடைத்துள்ளன.

அதேபோன்று எமது நாட்டுக்கு வருகைதரும் உல்லாச பிரயாணிகளில் 1/3 பகுதியினர் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர். அதேபோன்று உல்லாசபிரயாண ஹோட்டல் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கான இரண்டாவது பாரிய சந்தையாகவும் இந்தியா காணப்படுகின்றது. இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட திட்டமாக ஆரம்பித்துள்ள கருத்திட்டத்திற்கென 15 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை உபயோகித்து தனியான நிதியத்தை உருவாக்கியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை