ரஷ்ய படையெடுப்பு: முழு வீச்சில் தாக்குதல்; ரஷ்யா மீது கடுமையான தடைகளுக்கு திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக நேற்று வியாழக்கிழமை முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் பொழிந்து வருகின்றன. கிழக்கு செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் லுஹன்ஸ் பிராந்தியங்கள் மற்றும் தெற்கில் கடல் வழியாக ஒடெசா மற்றும் மரியுபோல் நகரங்களுக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அருகில் உள்ள பிரதான விமானநிலையத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு நகர் முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

தொடர்ச்சியான வெடிப்புகளால் ரஷ்ய எல்லைக்கு நெருக்கமாக உள்ள உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ்வில், குடியிருப்பு கட்டடங்கள் அதிர்ந்து வருவதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். மக்கள் பீதியில் நகரை விட்டு வெளியேற முண்டியடிப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டை அழிப்பதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோக்கம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“உக்ரைனில் புட்டின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை தொடுத்துள்ளார். அமைதியான உக்ரைனிய நகரங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ட்மிட்ரோ குளேபா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு ஆக்கிரமிப்புப் போர். உக்ரைன் தம்மை பாதுகாக்கும் மற்றும் வெற்றிபெறும். புடினை உலகினால் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக உக்ரைன் உள்விவகார அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படை நடவடிக்கை பற்றிய புட்டினின் அறிவிப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. உக்ரைனில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமக்கள் உட்பட மக்களை பாதுகாப்பதற்கான “விசேட இராணுவ நடவடிக்கை” ஒன்றுக்கு உத்தரவிட்டதாக புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

“உக்ரைனின் அழிவை தடுப்பது மற்றும் இராணுவமயமாக்களை தடுப்பதற்காக நாம் பாடுபடுவோம்” என்று புட்டின் கூறினார். “நவீன உக்ரைனிய பூமியில் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தலுடன் ரஷ்யாவின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் இருப்பை உணர முடியாது. இரத்தம் சிந்தப்படுவதற்கான அனைத்து பொறுப்பையும் உக்ரைனின் ஆளும் அரசு ஏற்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். 44 மில்லிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான உக்ரைன் ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடாகும். சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து பிரிவதற்கு அந்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அந்த நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் இணைய முயன்று வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை புட்டின் கடந்த சில மாதங்களாக மறுத்து வந்தார். எனினும் உக்ரைன் ரஷ்யாவில் இருந்து எதிரிகளால் செதுக்கப்பட்ட ஒரு செயற்கை உருவாக்கம் என்று அழைத்தார்.

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதில் நடவடிக்கையாக கடும் தடைகள் விதிக்கப்படுவது பற்றி உறுதி அளித்தார்.

தாம் ஜி7 தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தலைவர் ஜோசெப் பொரெல் உறுதி அளித்துள்ளார்.

“இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் ஐரோப்பாவின் இருண்ட மணித்தியாலங்களில் ஒன்றாக இது உள்ளது” என்று பொரெல் தெரிவித்தார். எனினும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை முழு வீச்சில் இடம்பெறுவது பற்றி உடன் உறுதி செய்ய முடியாதுள்ளது. “உக்ரைனை ஆக்கிரமிப்பது எமது திட்டத்தில் உள்ளடங்காது. நாம் எதையும் வலுக்கட்டாயமாக திணிக்கப்போவதில்லை” என்று புட்டின் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தில் பேசிய புட்டின், ரஷ்ய படைகளுக்கு மக்களை பாதுகாக்கும்படி தாம் உத்தரவிட்டதாகவும் உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போடும்படியும் குறிப்பிட்டார். புட்டின் உட்பட ரஷ்யா மீது சாத்தியமான அனைத்துத் தடைகளையும் விதிக்கும்படி உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புட்டின் உத்தரவு பிறப்பித்து மூன்று மணி நேரத்தின் பின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைன் விமானத் தளங்களில் இராணுவ உட்கட்டமைப்புகளை கைப்பற்றியதாகவும் அதன் வான் பாதுகாப்பை சீரழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

கீவ் மற்றும் வடக்கில் கார்கிவ்வில் இருக்கும் இராணுவ கட்டளை மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம் ரஷ்யத் துருப்புகள் ஒடெசா மற்றும் மிரியுபோலை அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்துகளை மூடியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மரியுபோல் உட்பட உக்ரைன் துறைமுகங்களுக்குச் செல்லும் இந்த நீரிணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Fri, 02/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை