உக்ரைன் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா - பெலாரஸ் போர் ஒத்திகை

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தொடுக்கும் அச்சத்திற்கு மத்தியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் 10 நாள் கூட்டு இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இந்த இராணுவ ஒத்திகை பதற்றத்தை அதிகரிக்கும் செயல் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இது உளவியல் ரீதியான அழுத்தத்தை அதிகாரிப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இந்த இராணுவ ஒத்திகைக்காக பனிப்போருக்கு பின் பெலாரஸில் ரஷ்யா அதிக படைகளை குவித்திருப்பதாக நம்பப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் 10,000க்கும் அதிகமான துருப்புகளை குவித்திருந்தபோதும் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுக்கும் திட்டத்தை இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும் அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நாடுகள் இந்தத் தாக்குதல் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்று எச்சரித்துள்ளன. முன்னாள் சோவிட் குடியரசு மற்றும் ரஷ்யாவுடன் கலாசார ரீதியில் நெருக்கம் கொண்ட உக்ரைன் மேற்கத்தேய பாதுகாப்பு அமைப்பான நேட்டோவில் இணையும் முயற்சியை ரஷ்யா எதிர்த்து வருகிறது. உக்ரைனின் அங்கத்துவத்தை ஏற்கக்கூடாது என்று நேட்டோவுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் அதனை அமெரிக்கா மற்றும் நோட்டோ நிராகரித்துள்ளன.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு உக்ரைனில் போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பதற்றத்தை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பெலாரஸுடனான இராணுவ ஒத்திகையில் சுமார் 30,000 ரஷ்ய துருப்புகள் பங்கேற்பதாக நம்பப்படுகிறது.

பெலாரஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகசன்கோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளார். 2020 இல் இடம்பெற்ற தேர்தலில் லுகசன்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெடித்தபோது ரஷ்யா அவருக்கு ஆதரவாக நின்றது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இந்த இராணுவ ஒத்திகை தீர்க்கமானதாக உள்ளது என்று ரஷ்ய அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உக்ரைன் தொடர்பான தற்போதைய பதற்றத்தை தணிப்பதில் இராஜதந்திரத்தில் தமது நாடு தொடர்ந்து நம்பி இருப்பதாக ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் விளாடிமிர் சிசோவ் தெரிவித்துள்ளார். தற்போது பெலாரஸில் நிலைகொண்டிருக்கும் ரஷ்ய துருப்புகள் ஒத்திகை முடிந்த பின் தமது முகாம்களுக்கு திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Fri, 02/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை