அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ரஷ்யா மீதான தடைகள் உக்கிரம்

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு ஒன்று ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா மீது பரந்த அளவிலான தடைகளை அறிவித்துள்ளார்.

'மேற்கத்தேய நிதி அமைப்பில் இருந்து ரஷ்ய அரசை நாம் துண்டிக்கிறோம்' என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு உக்ரைனின் இரு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு துருப்புகளை அனுப்ப ரஷ்ய அரசியல்வாதிகள் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அனுமதி அளித்ததை அடுத்தே பைடனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர் பகுதிகளில் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இது உக்ரைன் நாட்டின் இறைமைக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த செயல் பரந்த அளவான ஆக்கிரமிப்பு ஒன்றுக்கான காரணியாகவே மேற்கத்தேய நாடுகள் பார்க்கின்றன. அமைதி காப்பு பணிகளுக்காக உக்ரைனில் இருந்து பிரிந்துள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களுக்கு ரஷ்ய துருப்புகள் நுழைய புட்டின் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தார். இதனை முட்டாள்தனமானது என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ரஷ்யாவில் பல்வேறு புதிய துருப்பினர் மற்றும் தளபாடங்கள் குவிக்கப்பட்டிருப்பது மற்றும் பெலாரஸில் உக்ரைன் எல்லைக்கு அருகில் விமானத்தளத்தில் 100க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை செய்மதி படங்களை ஆதாரம் காட்டி அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மக்சார் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய இராணுவம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததோடு கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்ய துருப்புகள் அனுப்பப்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ரஷ்ய அரசை நேரடியாக இலக்குவைத்த நடவடிக்கைளில் முதல் கட்ட திட்டத்தை அறிவித்த ஜோ பைடன், 'எளிமையாகக் கூறுவதென்றால், உக்ரைனின் பெரும் பகுதியை வசப்பமுத்தும் அறிவிப்பையே ரஷ்யா வெளியிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இதில் ரஷ்ய வெளிநாட்டு கடனுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்மூலம் மேற்கத்தேய நிதி நிறுவனங்களில் இருந்து தனது நிதி உதவிக்காக இனியும் நிதி திரட்டுவதற்கு ரஷ்யாவுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் அமெரிக்கா தண்டித்துள்ளது. 'கிரெம்லின் கொள்கைகளில் மோசடி இலாபங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதோடு அதன் வலிகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்று பைடன் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களுடன் கொடுக்கல் வாங்கல் வைப்பதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்தபோதும் சில நிறுவனங்களே அதனை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய வங்கிகள் மற்றும் தனி நபர்கள் மீது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த செவ்வாய்க்கிழமை தடைகளை விதித்தன.

இதில் உக்ரைனின் பிரிந்த பிராந்தியங்களை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு வாக்களித்த ரஷ்ய பாராளுமன்ற மேலவையின் 351 உறுப்பினர்களை இலக்கு வைத்து பரந்த அளவில் ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகளும் இணங்கியுள்ளன.

ரஷ்யாவின் ஐந்து வங்கிகள் மற்றும் அதன் பிரிட்டனில் இருக்கும் சொத்துகள் முடக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மூன்று ரஷ்ய செல்வந்தர்கள் மீது பிரிட்டன் பயணத் தடை விதிக்கவுள்ளது. கனடா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளும் இவ்வாறான நடவடிக்கைகள் பற்றி உறுதி செய்துள்ளன.

மறுபுறம் நார்டு ஸ்ட்ரீம்–2 எனும் முக்கிய எரிவாயு குழாய்க்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடலோரப் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1200 கிலோ மீற்றர் நீளத்துக்கு இந்த எரிவாயு குழாய் அமைந்துள்ளது.

ரஷ்ய அரசு மற்றும் மேற்கத்திய எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக் குழாய் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை சுமந்து செல்ல அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இதற்கான பணிகள் முழுமையடைந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படுவது ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.

நார்டு ஸ்ட்ரீம் என்ற முதல் எரிவாயு குழாய் 2011ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உக்ரைன் மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்பின்போது எடுப்பதாக அச்சுறுத்தப்பட்ட தடைகள் அளவுக்கு தற்போதைய தடைகள் செல்லவில்லை. நிலைமை மோசமடைந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவும் ரஷ்யாவின் எல்லையில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் எஸ்தோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு தமது துருப்புகளை நகர்த்தி வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் இருக்கும் சுமார் 800 துருப்புகள் மற்றும் எப்–35 போர் விமானங்கள் மற்றும் 20 தாக்குதல் ஹெலிகொப்டர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படவிருப்பதோடு இதன்போது போலந்திற்கு படையினர் அனுப்பப்படவுள்ளனர்.

உக்ரைன் பிரச்சினை தொடர்பான இராஜதந்திர முயற்சிகள் இதுவரையில் தோல்வியை சேந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக நீடிக்கும் கிழக்கு உக்ரைன் பிரச்சினையை தடுக்கும் நோக்கிலான உக்ரைன் உடன்படிக்கைகள் இனியும் நடைமுறையில் இல்லை என்று ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் இன்று வியாழக்கிழமை இடபெறவிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

'ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருப்பதை எம்மால் பார்க்க முடிகிறது. இராஜதந்திரத்தை ரஷ்யா ஒட்டுமொத்தமாக நிராகரித்திருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், இந்த நேரத்தில் சந்திப்பை ஏற்படுத்துவது அர்த்தமற்றது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது அணுகுமுறையை மாற்றினால் அமெரிக்காவால் ரஷ்யாவுடன் பேச முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதற்கு அலோசித்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உறையாற்றிய செலென்ஸ்கி, மேலதிக இராணுவத்தினரை பயிற்சிக்கு அழைத்தார். எனினும் உக்ரைன் தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சி ஒன்றை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

முழுமையான இராணுவ குவிப்பு ஒன்றுக்கு தேவை இருக்காது என்று அவர் கூறினார்.

Thu, 02/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை