ரஷ்யப் படை உக்ரைனுக்குள் நுழைவதற்கு புட்டின் உத்தரவு

பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம்: தடை விதிப்பது பற்றி எச்சரிக்கை

உக்ரைனின் இரு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருக்கும் ரஷ்யா அந்த பகுதிகளுக்கு ரஷ்ய துருப்புகள் நுழைவதற்கு உத்தரவிட்டுள்ளது.

தன்னிச்சையாக மக்கள் குடியரசுகளாக அறிவிக்கப்பட்ட டொனட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ் பிராந்தியங்களில் அமைதிகாப்பு நடவடிக்கையில் துருப்புகள் ஈடுபடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அந்த துருப்புகளை அமைதிப்படை என்று அழைப்பது 'முட்டாள்தனம்' என்றும் ரஷ்யா போருக்கான பொய்யான காரணி ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இந்த இரு பிராந்தியங்களும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதோடு அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் உக்ரைன் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

எமது நாட்டு இறைமையை ரஷ்யா வேண்டுமென்றே மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிந்திய இரவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய செலன்ஸ்கி, 'உக்ரைன் அமைதியை விரும்புகிறது, ஆனால் நாம் பயப்படவில்லை என்பதையும் யாருக்கும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம். உக்ரைனுக்கு அதன் சர்வதேச கூட்டாளிகளிடம் இருந்து தெளிவான மற்றும் பயனுள்ள ஆதரவு நடவடிக்கை தேவையாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

'எமது உண்மையான நண்பர்கள் மற்றும் பங்காளிகள் யார் என்றும் ரஷ்யாவை வார்த்தைகளால் மாத்திரம் பயமுறுத்துபவர்கள் யார் என்றும் பார்ப்பது இப்போது மிக முக்கியமானதாகும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துருப்புகள் அமைதிகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறுவதை ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தில் அமெரிக்க தூதுவர் லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் நிராகரித்தார். 'உண்மையில் அவர்கள் யார் என்பது எமக்குத் தெரியும்' என்று அவர் குறிப்பிட்டார்.

டொனட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ் பிராந்தியங்களை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது உக்ரைன் மீது ஆக்கிரமிப்புத் தொடுப்பதற்கான ரஷ்யாவின் காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று லின்டா சாடினார்.

மறுபுறம் பாதுகாப்புச் சபையில் பேசிய ரஷ்ய தூதுவர் வசிலி நெபன்சியா, உக்ரைனின் தாக்குதலில் இருந்து கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தித்தை பாதுகாக்க வேண்டி இருப்பதாக வாதிட்டுள்ளார். 'டொன்பாஸில் புதிய இரத்த ஆறு ஒடுவதை அனுமதிப்பது நாம் செய்ய விரும்பாத ஒன்று' என்று அவர் கூறினார்.

டொனட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ் பிராந்தியங்களின் பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு அண்மைய ஆண்டுகளில் ரஷ்ய கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருப்பதோடு பொதுமக்களை பாதுகாக்கும் போர்வையில் ரஷ்யா இராணுவ பிரிவுகளை தற்போது அங்கு நகர்த்துவதாக மேற்கத்தேய கூட்டணிகள் அஞ்சுகின்றன.

கடந்த திங்கட்கிழமை ஒரு மணி நேரம் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தற்போதைய உக்ரைன் சோவியட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்றார். அந்த நாட்டை பண்டைய ரஷ்ய நிலங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனை 1991 இல் சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சியின்போது ரஷ்யாவிடம் இருந்து திருடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் புட்டின், பொம்மை அரசு ஒன்றினால் உக்ரைன் அமெரிக்காவின் காலனி ஒன்றாக இருந்து வருவதாகவும் தற்போதைய தலைமையின் கீழ் அங்குள்ள மக்கள் துன்பத்தில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 2014 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் ரஷ்ய ஆதரவு உக்ரைன் தலைவர் பதவி கவிழ்க்கப்பட்டது ஒரு சதிப்புரட்சி என்றும் புட்டின் குறிப்பிட்டார்.

புட்டினின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்திருப்பதோடு, பிளவுபட்ட பிராந்தியங்களில் அமெரிக்கர்கள் புதிய முதலீடு, வர்த்தகம் மற்றும் நிதிச் செயற்பாட்டில் ஈடுபடுவதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைச்சாத்திட்டுள்ளார். மேற்குலக நாடுகள் எடுக்கவுள்ள பரந்த அளவான தடைகளில் இருந்து தனியானதாக இந்தத் தடை உள்ளது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறுகையில், 'ரஷ்யாவின் நடவடிக்கைகள், உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான சர்வதேச சட்டங்களின் விதிமீறல்' என தெரிவித்தார். 'இது ஒரு கெட்ட சகுணம்' என தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதிப்பது தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவிப்புக்கான அந்நாட்டு அரசின் அவசரக்குழு கூட்டத்தை அவர் நேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

'உக்ரைனுடன் ஒற்றுமை மற்றும் உறுதியுடன் செயல்படுவதாக' ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது. ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இருவரும் ரஷ்யாவின் அறிவிப்புக்கு முன்னதாக, அந்நாட்டு ஜனாதிபதியுடன் உரையாடினர். மேற்கு நாடுகள் உக்ரைன் பின்பு அணிதிரண்டுள்ளது. ரஷ்யா படையெடுத்தால் அந்நாட்டுக்கு எதிராக கடும் தடைகள் விதிக்கப்படும் என அந்நாடுகள் எச்சரித்துள்ளன. ஆனால், அந்நடவடிக்கைகள் எந்தளவுக்கு இருக்கும் என தெளிவாக தெரியவில்லை.

1990கள் வரை உக்ரைன் சோவியட் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியட் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.

இப்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளை உக்ரைன் கொண்டுள்ளது.

இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர். உக்ரைன் எல்லைகளில் தற்போது 150,000க்கும் அதிகமான ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே தற்போதைய பதற்றம் உக்கிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று ரஷ்யா மறுக்கின்றபோதும் அந்தத் தாக்குதல் உடன் இடம்பெறும் ஒன்றாக உள்ளது என்று அமெரிக்க கூறுகிறது.

Wed, 02/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை