ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதல்

இதுவரை 40 பேர் பலி: நகரை விட்டு வெளியேற மக்கள் முண்டியடிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக நேற்று வியாழக்கிழமை முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்

போருக்குப் பின் ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.

உக்ரைனின் பிரதான நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் லுஹன்ஸ் பிராந்தியங்கள் மற்றும் தெற்கில் கடல் வழியாக ஒடெசா மற்றும் மரியுபோல் நகரங்களுக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பெலாரஸ் நாட்டு எல்லை ஊடாகவும் ரஷ்ய படைகள் நாட்டுக்குள் வருதாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அருகிலுள்ள பிரதான விமானநிலையத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு நகர் முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பீதியடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும் நகரை விட்டு வெளியேறுவதற்கும் முண்டியடிக்கின்றனர்.

உக்ரைன் மீதான படை நடவடிக்கை பற்றிய புட்டினின் அறிவிப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. உக்ரைனில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமக்கள் உட்பட மக்களை பாதுகாப்பதற்கான “விசேட இராணுவ நடவடிக்கை” ஒன்றுக்கு உத்தரவிட்டதாக புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தமது நாட்டை அழிப்பதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோக்கமென்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிட் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதில் நடவடிக்கையாக கடும் தடைகள் விதிக்கப்படுவது பற்றி உறுதி அளித்தார்.

தாம் ஜி7 தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தலைவர் ஜோசெப் பொரெல் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இதுவரை சுமார் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்சி ரெஸ்டோவின் குறிப்பிட்டுள்ளார். எனினும் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் இருப்பது பற்றி அவர் குறிப்பிட்டு கூறவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

44 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான உக்ரைன், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்து மிகப்பெரிய நாடாகும். சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிடமிருந்து பிரிவதற்கு அந்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அந்த நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் இணைய முயன்று வருகிறது.

Fri, 02/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை