உக்ரைன் பதற்றம்: அடுத்து வரும் நாட்கள் தீர்க்கமானது

புட்டினை சந்தித்த மெக்ரோன் தெரிவிப்பு

உக்ரைன் நெருக்கடியை தணிப்பதில் அடுத்த வரும் நாட்கள் தீர்க்கமானது என்று பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடனான சந்திப்புக்கு பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்திருக்கும் நிலையில் மேற்குலக தலைவர் ஒருவரின் முதலாவது ரஷ்ய விஜயமாகவே மெக்ரோன் அங்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மெக்ரோன் சமிக்ஞை காட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

எவ்வாறாயினும், மோதல் ஒன்று வெடிக்கும் சாத்தியம் பற்றி மேற்குலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பு ஒன்றை தொடுப்பதற்கு தேவையான 70 வீதமான இராணுவத்தை குவித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறி இருந்தனர்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நோர்ட் ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வொஷிங்டனில் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஷோல்டஸ் உடன் கடந்த திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீதான தடைக்கு ஆதரவு அளிக்கும் கூற்றை பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் வெளியிட்டுள்ளார். தி டைம் பத்திரிகைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை எழுதிய கட்டுரையில் அவர், பிராந்தியத்தில் பிரிட்டன் விமானப்படை போர் விமானங்கள் மற்றும் கடற்படைகளை நிறுத்துவதற்கு ஆலோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பதற்றத்தை தணிப்பது பற்றி ரஷ்யா முன்வைத்த பல கோரிக்கைகளை மேற்குலக நாடுகள் ஏற்கனவே நிராகரித்துள்ளன. இதில் நோட்டோவில் உக்ரைன் அங்கத்துவத்தை பெறுவதை அந்த அமைப்பு நிராகரிக்க வேண்டும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதன் இராணுவ நிலைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அடங்கும்.

இந்நிலையில் புட்டின் உடன் இரவு உணவு விருந்தில் பங்கேற்ற மெக்ரோன், பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பு ஐந்து மணி நேரம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மெக்ரோன், எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானது என்றும் நாம் ஒன்றாக சேர்ந்து தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டி உள்ளது என்றும் கூறினார்.

மெக்ரோனின் சில முன்மொழிவுகள், 'மேலும் கூட்டு நடவடிக்கைக்கான அடிப்படையை உருவாக்கலாம் என்றும் அது பற்றி கூறுவது முன்கூட்டியதாக அமையக் கூடும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று உக்ரைன் பயணமானதோடு அங்கு அவர் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் புட்டினுடன் மீண்டும் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

Wed, 02/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை