தடை செய்யப்பட்ட பொருளை எதிரணி சபைக்குள் எடுத்து வந்ததால் சர்ச்சை

சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று சபைக்குள் டோர்ச் லைட் ஒன்றை கொண்டு வந்ததால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

சில நிமிடங்கள் நீடித்த சர்ச்சையையடுத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைகையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா

அபேவர்தன சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளை நிறைவடைந்த பின்னர், சபை முதல்வரான தினேஷ் குணவர்தன முக்கிய விடயம் ஒன்றை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன்போது பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், சபைக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள உபகரணம் ஒன்றை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபைக்குள் எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதனை சோதனையிட முற்படுகையில், அங்கு பொலிஸாருக்கும் சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையே பெரும் விவாதம் ஏற்பட்டதாக அவர் சபையில் தெரிவித்தார்.

மேற்படி உபகரணத்தை எவரும் சபைக்குள் கொண்டு வரமுடியாது. அத்தகைய உபகரணங்களில் இரசாயனம் உள்ளடங்கி இருக்கலாம்.

அது தனிப்பட்ட எனக்கு மட்டுமன்றி முழு பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். என சபையில் தெளிவுபடுத்தினார்.

அதன்போது, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சிரிப்பொலி எழுப்பினர்.இதையடுத்து.தற்போது சிரிப்பவர்கள்தான் ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்தி 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாக காரணமானவர்கள். அதேபோன்று புஞ்சி பொரளை தேவாலயத்தில் அத்தகைய அழிவை ஏற்படுத்த முயன்றவர்களும் இவர்களே! அது தொடர்பில் சபாநாயகர் தமது முழுமையான கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த சபாநாயகர்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு இணங்க அனாவசியமான பொருட்களை சபைக்குள் எடுத்து வர முடியாது, இதைக்கண்காணிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனால், உஷார் அடைந்த எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி,டோர்ச் ஒளியை பரப்பி சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடரவே சபையை கட்டுப்படுத்தும் வகையில் 10 நிமிடங்கள் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பித்தபோது, மேற்படி உபகரணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளடங்குவதாகவும் அதனை சபைக்குள் கொண்டு வருவது தடை என்றும் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் அது வீட்டுப் பயன்பாட்டுக்கு பிரயோசனமாக இருக்கும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வழமைபோன்று சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. மேற்படி சர்ச்சை சுமார் அரை மணித்தியாலங்கள் சபையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை