உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா நியாயம் தேடுவதாக அமெ. குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுப்பதற்கான இட்டுக்கட்டப்பட்ட காரணங்களை ரஷ்யா தயாரித்து வருவதாகவும் அந்தத் தாக்குதல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறலாம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை விரைவாக இடம்பெறக் கூடும் என்றும் ஆனால், இராஜதந்திர தீர்வுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ரஷ்யா பல வழிகளை பயன்படுத்தக் கூடும் என்று பைடனின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரதான அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூற்று அடிப்படை அற்றது என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, அமெரிக்கா பதற்றத்தை உருவாக்குகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

தனது மேற்கு அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்புத் தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா கூறுகின்றபோதும், அதனை மேற்கத்தேய நாடுகள் மறுத்துள்ளன.

‘தாக்குதல் தொடுப்பதை நியாயப்படுத்த போலியான நடவடிக்கை ஒன்றில் அவர்கள் ஈடுபடுவது பற்றி நாம் நம்புவதற்கு காரணம் உள்ளது’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பைடன் தெரிவித்தார். இதில் தனது நலனுக்காக இட்டுக்கட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை நடத்தி பதில் தாக்குதல் ஒன்றாக நியாயப்படுத்த ரஷ்யா முயல்வதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. ரஷ்யாவின் இந்த திசை திருப்பும் திட்டம் பற்றி அமெரிக்கா பல வாரங்களாகக் கூறி வருகிறது.

ரஷ்யா அவ்வாறான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ஐ.நா பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டார்.

முன் திட்டமிடப்பட்ட அந்தத் தாக்குதல் என்னவென்று தெரியாதபோதும் ‘ரஷ்யாவுக்குள் பயங்கரவாத குண்டுத் தாக்குதல், பாரிய புதைகுழி கண்டுபிடிப்பு, பொதுமக்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல், போலி அல்லது உண்மையான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது’ உட்பட சாத்தியங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான சம்பவத்திற்கு பின் ரஷ்யா ஒரு நாடகமாக உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதற்கு அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உக்ரைனை இலக்கு வைக்கக் கூடும் என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. எனினும் சிலர் நான் கூறுவது பற்றி கேள்வி எழுப்பலாம். ‘ஆனால், ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன், நான் இங்கு போரை ஆரம்பிக்க வரவில்லை. அதனை தடுக்கவே வந்தேன்’ என்று பாதுகாப்பு சபையில் பிளிங்கன் குறிப்பிட்டார். ஏனைய மேற்குலகத் தலைவர்களும் இந்தக் கூற்றை பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிட்டனர். ‘முன் திட்டமிடப்பட்ட ஆயுதத் தாக்குதல் ஒன்று பற்றி’ நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டொல்ட்பேர்க் எச்சரித்ததோடு, பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ் மற்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், முன் திட்டமிடப்பட்ட தாக்குதுல் ஒன்று பற்றி குறிப்பிட்டார். உக்ரைன் படை மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நாட்டின் கிழக்கில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதை அடுத்தே பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் போர் நிறுத்தத்தை மீறும் இவ்வாறான துப்பாக்கிச் சண்டைகள் அசாதாரணமானது அல்ல. ஆனால் இந்த வன்முறை தொடர்பில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் ஸ்டனிட்சியா லுஹன்ஸ்கா நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சிறுவர்களின் இசை அறையின் சுவர்கள் இடிந்து மூன்று பெரியவர்கள் காயமடைந்ததாகவும் சிறுவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் பல பகுதிகளில் உக்ரைன் படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Sat, 02/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை