புதிய திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

  • பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்)
  • விரைவில் முழுமையான விவாதம்
  • சட்ட மூலத்துக்கு எதிராக எவரும் உச்ச நீதிமன்றம் செல்லலாம்
  • அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு
  • சட்டமூல உள்ளடக்கம் தொடர்பில் மு.கா, கூட்டமைப்பு சபையில் கேள்வி

பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சட்டத் திருத்தம் சமர்ப்பிப்பது மாத்திரமே இடம்பெறுவதாகவும் இதற்கு எதிராக எந்த பிரஜைக்கும் உச்ச நீதிமன்றம் செல்ல முடியுமெனவும் சட்டத் திருத்தம் தொடர்பில் சபையில் முழுமையான விவாதம் நடைபெறுமெனவும் அமைச்சர் பீரிஸ் சபையில் அறிவித்தார்.

இச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் எதிரணி எம்.பிக்களான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்றது. தினப்பணிகளை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்ட மூலத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அந்த திருத்தங்களையும் அரசு கவனத்தில் கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கருத்து வெளியிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக மாற்றப்படுமென ஊடக மாநாடொன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் கொண்டுவருவாக அவர் கூறியிருந்தார். அவ்வாறாயின் ஏன் இந்தத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்படுகிறதென சுமந்திரன் எம்.பி வினவினார். சபாநாயகர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், சட்டத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவாத்தின்போது உங்களின் யோசனைகளை முன்வைக்கலாமென்றார்.

எதிரணியின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பீரிஸ்,

சட்டத் திருத்தம் தொடர்பில் இன்று விவாதிக்கப்படமாட்டாது. சமர்ப்பிப்பது மாத்திரமே இன்று இடம்பெறுகிறது. சகல விதமான விமர்சனங்களையும் விவாதத்தின் போது முன்வைக்கலாம். நிலையியல் கட்டளைக்கமைவாக இந்த சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரஜைக்கும் இதனை சவாலுக்குட்படுத்தி உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தின் பின்னர் முழுமையான விவாதம் நடத்தப்படும். எந்த ஒரு சட்டமூலமும் இவ்வாறு தான் சமர்ப்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 02/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை