லங்கா ஈ நியூஸ் கீர்த்தி ரத்நாயக்க

பிணையில் விடுதலை!

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ளதாக தகவல் வழங்கிய, லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகார எழுத்தாளரான கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டு 6 மாத தடுப்புக் காவலின் பின்னர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

1979 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 5 (1) ஆ பிரிவின் கீழ், பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனை பாதுகாப்பு தரப்புக்கு வழங்காமை தொடர்பில் பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளபோதும், அத்தகைய குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்த அவருக்கு எதிராக போதுமான சான்றுகள் இல்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே அவரை சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. லங்கா ஈ நியூஸ் தளத்துக்கு அவர் எழுதிய ஆக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிஐடியினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர் அவரை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சிஐடியில் ஆஜராக நிபந்தனை விதிக்குமாறு சிஐடியினர் நீதிமன்றைக் கோரியபோதும், எந்த அடிப்படையும் இல்லாத நிலையில் அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிவான் மறுத்தார்.

 

Sat, 02/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை