தொடர்வதா - கைவிடுவதா? இன்று இறுதி முடிவு

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று மேற்கொள்ளப் போவதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நிறைவேற்றுக்குழு கூடி போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தாம் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கவனத்திற்கொண்டு மேற்படி தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தாதி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கடந்த ஆறு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை, ஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் ஏழாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். அதனால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் அன்றாட செயற்பாடுகள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டதுடன் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும் சுகாதார துறை நடவடிக்ைககளை சீர்குலைக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்க முடியாது என்றும் அதனைக் கைவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன் சுகாதார சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் விசேட வர்த்தமானியொன்றும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனை மீறும் வகையிலேயே 15 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த நிலையிலேயே போராட்டத்தைத் தொடர்வதா கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் நேற்று தெரிவித்துள்ளார். (ஸ)

 (லோரன்ஸ் செல்வநாயகம்)

Mon, 02/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை