ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஏவப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு

இஸ்ரேலிய ஜனாதிபதி ஒருவரின் முதல் விஜயமாக இசாக் ஹர்சோக் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் யெமனில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இடைமறிக்கப்பட்ட இந்த ஏவுகணையின் பாகங்கள் மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த ஏவுகணை இலக்கு வைத்த பகுதி பற்றி கூறப்படவில்லை.

இதற்கு பதில் நடவடிக்கையாக யெமனின் வடக்கின் அல் ஜவுப் பிராந்தியத்தில் உள்ள ஏவுகணை ஏவுதளம் தாக்கி அழிக்கப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் மூன்று எண்ணெய் தொழிற்சாலை ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

ஜனவரி 17 தாக்குதலுக்கு பொறுப்பேற்ற யெமனின் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடாத்தவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

2020 இல் ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய பின் இஸ்ரேல் ஜனாதிபதி முதல் முறை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேலிய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜனாதிபதியின் விஜயம் திட்டமிட்டபடி தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tue, 02/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை