48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைப்பு

உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய உறுப்பு நாடுகளுக்கு உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

துருப்புகள் குவிக்கப்படுவது பற்றி உத்தியோகபூர்வமாக விளக்கம் கோரப்பட்டபோதும் அதனை ரஷ்யா பொருட்படுத்தவில்லை என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக ரஷ்யாவின் திட்டங்கள் பற்றிய வெளிப்படை தன்மைக்காக 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைக்கு கோரப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

உக்ரைன் எல்லையை ஒட்டி ரஷ்யா சுமார் 100,000 படைகளை குவித்திருந்தபோதும் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் திட்டம் இல்லை என்று அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும் ரஷ்யா எந்த நேரத்திலும் வான் தாக்குதல்களை ஆரம்பிக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல டஜன் நாடுகள் உக்ரைனில் இருக்கும் தமது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவிறுத்துள்ளன.

இந்நிலையில் பதற்ற சூழலை தனிக்கும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ்வில் ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாப் ஸ்கால்ஸ் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அவர் இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மொஸ்கோவில் சந்திப்பு நடத்த உள்ளார்.

ஏஞ்சலா மெர்கலிடமிருந்து ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஓலாப் ஸ்கால்ஸ், எவ்வித படையெடுப்பை நிகழ்த்தினாலும், ரஷ்யா தீவிரமான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இதன்மூலம், அவர் மற்ற மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோ இராணுவ கூட்டணியின் உறுப்பு நாடுகளின் கருத்துகளையே எதிரொலித்துள்ளார்.

இதற்கிடையில், 'போரின் விளிம்பிலிருந்து' ரஷ்யாவை திருப்பி அழைத்துவர ஐரோப்பா முழுவதும் புதிய இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளார்.

Tue, 02/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை