கொங்கோவுக்கு 325 மில். டொலர் இழப்பீடு: உகண்டாவுக்கு உத்தரவு

கொங்கோ ஜனநாயகக் குடியரசுடனான மோதலுக்கு இழப்பீடாக அந்த நாட்டுக்கு 325 மில்லியன் டொலர்களை செலுத்தும்படி உகண்டா நாட்டுக்கு ஐ.நாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உகண்டா ஆக்கிரமிப்பு படை ஒன்றாக செயற்பட்டு சர்வதேச ஒழுங்குகளை மீறியதாக சர்வதேச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு இடுரி பிராந்தியத்தில் 10 தொடக்கம் 15,000 பேர் கொல்லப்பட்டதற்கு உகண்டா பொறுப்புக்கூற வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உகண்டா படை தங்கம், வைரம் மற்றும் மரங்களையும் திருடியுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொங்கோ 11 பில்லியன் டொலர் இழப்பீடு கெட்டபோதும் அதன் பல பகுதிகளை நிராகரித்த நீதிபதிகள் அதனை விடவும் மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக நிர்ணயித்துள்ளனர்.

இதன்படி 2022 மற்றும் 2026 க்கு இடையே 65 மில்லியன் டொலர் வருடாந்த தவணை அடிப்படையில் ஐந்து தவணைகளில் உகண்டா இதனை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் நீதிபதிகள் முதல் தவணையை செப்டெம்பரில் செலுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.

Fri, 02/11/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை