புராதன இலங்கையை நவீன சமூகத்துக்கு காண்பிக்கும் 2022 நாட்காட்டியை வெளியிட்டுள்ள DIMO நிறுவனம்

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையின் ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சித்திரிக்கும் 2022 நிறுவன நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. நாட்டின் சிறப்பான மற்றும் துடிப்பான கடந்த காலத்தை நினைவுகூரும் அதேவேளையில், நாடு தொடர்பில் பெருமைப்படுவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள DIMO 2022 நிறுவன நாட்காட்டியானது, இலங்கையின் புராதன தருணங்களின் காட்சிகள் சிலவற்றை மீள்வடிவமைப்பு செய்து கொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

'கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டுதல்' எனும் நிறுவனத்தின் நோக்கத்திற்கு இணங்க, இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை DIMO நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரமிக்க வைக்கும் தொழில்நுட்ப அற்புதங்கள் தொடக்கம் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட விடயங்களுடன், தனது சொந்த கலாசாரத்தினால் போஷிக்கப்பட்டு வந்த, புராதன இலங்கை தனித்துவமாக இருந்து வந்தது.

DIMO இன் 2022 நிறுவன நாட்காட்டியின் வெளியீட்டில் உரையாற்றிய DIMO தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, “நாட்டின் அடுத்த தலைமுறையினருக்கு நமது தேசத்தின் வரலாறு மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றிக் கற்றுக் கொடுப்பது எமது உச்சக்கட்ட பொறுப்பு என DIMO நம்புகிறது. பலராலும் அறியப்படாத செழுமையான வரலாற்று நிகழ்வுகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், இந்த தருணங்களை உயிர்ப்பிப்பதன் மூலம் வரலாற்றை மீண்டும் உருவாக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்" என்றார். DIMO இன் 2022 நிறுவன நாட்காட்டிக்கு, இலங்கையின் வரலாறு மற்றும் பண்டைய வாழ்க்கை முறைகளை மீள்வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் முன்னணிக் கலைஞரான பிரசன்ன வீரக்கொடியால் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாறு தொடர்பான அதீத அக்கறை கொண்ட மாணவராக, அவரது படைப்புகள் இலங்கையின் ஆரம்பகால வாழ்க்கை முறைகளின் மிகவும் துல்லியமான சித்தரிப்புகளாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

DIMO வின் 2022 நிறுவன நாட்காட்டியில் உள்ள வெளிப்பாடுகளில் காசியப்ப மன்னன் மற்றும் சிகிரியா சிங்க நுழைவாயில் (பிரமாண்ட பாரம்பரிய சிற்பம் மற்றும் கலை), மஹாதோட்டா (மா-தோட்டம்), மன்னாரில் உள்ள இயற்கை துறைமுகம், மஹாசேன மன்னன் மற்றும் குளத்தின் கட்டுமானம் (பிரமாண்டமான நீர்ப்பாசன பணிகள்) ஆகியன அடங்குகின்றன. முதலாம் பராக்கிரமபாகு மன்னன் மற்றும் கடற்படை (பண்டைய இலங்கையில் கடற்பயணம்), மத்துல அலு லெனா - திரிபிடகத்தின் எழுத்து (அறிஞர்களின் பணி) மற்றும் இலங்கையில் உள்ள மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Fri, 02/11/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை