ஐரோப்பாவுக்கு 2,000 மேலதிக அமெரிக்க துருப்புகள் விரைவு

ரஷ்யா–உக்ரைன் பதற்றம்:

ஐரோப்பாவில் நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஐரோப்பாவுக்கு 2,000 மேலதிக துருப்புகளை அனுப்பவுள்ள அமெரிக்கா மேலும் 1,000 துருப்புகளை ஜெர்மனியில் இருந்து ருமேனியாவுக்கு இடமாற்றவுள்ளது. தற்போதைய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதற்றத்திற்கு மத்தியிலேயே பெண்டகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படையினர் வரும் நாட்களில் நிலைநிறுத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தவிர, 8,500 படையினரை பெண்டகள் கடந்த வாரம் உஷார் நிலையில் வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நேட்டோ அங்கத்துவம் பெறாத உக்ரைனில் அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்படாது என்று கிர்பி வலியுறத்தினார்.

“எமது நேட்டோ கூட்டணிக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் எந்த ஒரு தாக்குதலையும் தடுப்பது மற்றும் பாதுகாப்பதற்கு தயார் நிலையில் நாம் இருக்கிறோம் என்ற உறுதியான சமிக்ஞையை உலகுக்கு காண்பிப்பதாக இந்த நடவடிக்கை அமையும்” என்றும் அவர் கூறினார். இதில் 1,700 படையினர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் இருந்து போலந்துக்கு அனுப்பப்படும் என்றும் மேலும் 300 பேர் ஜெர்மனி முகாமில் இருந்து அனுப்பப்படும் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ரஷ்யா தனது உக்ரைன் நாட்டு எல்லை பகுதியில் படைகளை குவித்து வருவதே அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்த காரணமாகியுள்ளது. அண்டை நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க தயாராகி வருவதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றபோதும் அதனை ரஷ்யா மறுத்து வருகிறது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி முன்னாள் சோவியட் குடியரசுகளில் விரிவாக்கப்படுவதை நிறுத்தி பாதுகாப்பு உத்தரவாதத்தை ரஷ்யா கோருகிறது. எனினும் அமெரிக்க மற்றும் நேட்டோ இந்தக் கோரிக்கை நிராகரித்துள்ளன.

அமெரிக்க படைகள் நிறுத்திவைப்பு ஓர் “அழிவு உண்டாக்கும்” நடவடிக்கை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ குறிப்பிடுகிறார்.

Fri, 02/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை