எல்லை தாண்டி 2 இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்தியர்கள் கைது

எல்லை தாண்டி 2 இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்தியர்கள் கைது-Illegal Fishing-12 Indian Fishermen Arrested with 2 Trawler Boat

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் பயணித்த சட்டவிரோத இரண்டு இழுவை மீன்பிடி படகுகளும்  (bottom trawling) கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (12) இரவு தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து இரு இழுவைப் படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட படகுகளையும் சந்தேகநபர்களான மீனவர்களையும் கடற்படையினர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவு, கராச்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களை அப்பகுதியிலுள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோதமான முறையிலான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 மீனவர்கள், 3 ட்ரோலர் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தலைமன்னார் விஷேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

Sun, 02/13/2022 - 11:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை