ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்-Gotabaya Rajapaksa Honoured with the title of 'Sri Lankadheeshwara Padma Vibhushana

- மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்கசபையினால் வழங்கி வைப்பு

அரசியலில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களுக்கு முகம் சுளிக்காமல், எதிர்காலத்தில் இந்நாடு கட்டியெழுப்பப்படும் என நம்புகிறோம்
- வண. கொடபிட்டிய ராஹுல தேரர்

மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம், பலம் மற்றும் தைரியம் என்பன எப்போதும் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்
- மஹாநாயக்க தேரர் அதி வண. இத்தாபான தம்மாலங்கார தேரர்

பயணித்த பாதையில் முகங்கொடுக்க நேரிட்ட இடையூறுகளைத் தாண்டி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்
தேவையேற்படின் கடுமையான முடிவுகளை எடுக்கவும் தயார்

- மஹாசங்கத்தினரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில், மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்-Gotabaya Rajapaksa Honoured with the title of 'Sri Lankadheeshwara Padma Vibhushana

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவ நிர்வாகம், தாய் நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் அவரது கடந்தகாலம் முதல் தற்போது வரையான களங்கமற்ற இருப்பை அடையாளப்படுத்தும் வகையில், இன்று (02) பிற்பகல் கோட்டே ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வின் போதே, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால் இந்தக் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.

இதற்கான ஆவணப் பத்திரம் வாசிக்கப்பட்ட பின்னர், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்க தேரர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தாபான தம்மாலங்கார தேரரினால், ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்-Gotabaya Rajapaksa Honoured with the title of 'Sri Lankadheeshwara Padma Vibhushana

நிகழ்வின் வரவேற்புச் சொற்பொழிவை, அந்தச் சங்க சபையின் பிரதிப் பதிவாளரும் ஸ்ரீ லங்கா பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தருமான பேராசிரியர் வண. நெலுவே சுமனவங்ச தேரர் நிகழ்த்தினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செலவிடப்பட்ட காலத்தை விட அதிகளவான காலம் எஞ்சியுள்ளதால், எதிர்வரும் மூன்று வருடக் காலத்தைச் சிறப்பான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது என்று, இந்நிகழ்வின் பிரதான சொற்பொழிவை நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் பிரதமப் பதிவாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் தலைவருமான அக்கமஹா பண்டித பேராசிரியர் அதி வணக்கத்துக்குரிய கொடபிட்டியே ராஹுல அனுநாயக்க தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்-Gotabaya Rajapaksa Honoured with the title of 'Sri Lankadheeshwara Padma Vibhushana

வெற்றியைப் பகிர்ந்துகொள்ள பலர் இருப்பினும், முயற்சி அல்லது தவறுதலால் ஏற்படும் தோல்விக்கான பழி, எப்போதும் தலைவரிடத்திலேயே சுமத்தப்படும். இது சகஜமெனிலும், அரசியலில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களுக்கு முகம் சுளிக்காமல், எதிர்காலத்தில் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பலம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாக, அதி வணக்கத்துக்குரிய கொடபிட்டியே ராஹுல தேரர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம்-Gotabaya Rajapaksa Honoured with the title of 'Sri Lankadheeshwara Padma Vibhushana

ஆசீர்வதிக்கப்பட்ட இந்தக் கௌரவப் பட்டமானது, ஜனாதிபதியின் வாழ்க்கைக்குப் பெரும் பலமாகவும் சக்தியாகவும் இருக்குமென்று, நிகழ்வின் தலைமைத்துவச் சொற்பொழிவை நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்க தேரர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தாபான தம்மாலங்கார தேரர் குறிப்பிட்டார்.

மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம், பலம் மற்றும் தைரியம் போன்றவற்றை ஜனாதிபதிக்கு வழங்க எப்போதும் நடவடிக்கை எடுப்பதாகவும், தேரர் தெரிவித்தார்.

மஹா சங்கத்தினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் போது ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை...

என்னை இந்த நாட்டின் முதல் குடிமகனாக ஆக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளைச் செய்த சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பூரண பொறுப்பு எனக்கு உள்ளது

சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் தலைமையிலான சானுநாயக்க உபாதாய கௌரவமிக்க மஹா சங்கசபை தேரர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினரின் அனுமதியுடன்,

அதிதிகளே, நண்பர்கள்,
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால் இன்று எனக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டத்தை, பணிவான கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். அதேபோன்று, நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை வெற்றிகரமாகத் தொடர எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் பெரும் பலமாகவும் ஊக்கமாகவும் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் நான் மதிக்கிறேன். அவை அனைத்தையும் நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்கிறேன். அதை என் அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன்.

எனது பெற்றோரின் பாரம்பரியத்தால் ஒரு பௌத்தராகப் பிறந்து, நாட்டின் முன்னணி பௌத்த பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நான் பெற்ற பயிற்சி, கல்யாண மித்திர மஹா சங்கத்தினரின் அறிவுரைகளைப் பின்பற்றிய உத்வேகம், இராணுவத்தில் நான் பணிபுரிந்தமையால் பெற்ற ஒழுக்கம் என்பன, எனது வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக மாறக் காரணமாய் அமைந்தன என்பதை இந்நேரத்தில் விசேடமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இராணுவ அதிகாரியாகவும் பாதுகாப்புச் செயலாளராகவும் நான் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, இன்று நீங்கள் என்னை கௌரவிக்கின்றீர்கள்.

எனது இருபது வருடகால இராணுவச் சேவையின் போது, ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இரண்டாம் ஈழப்போரின் போதும், வடக்கு மற்றும் கிழக்கில் நான் பல முக்கியப் பணிகளைச் செய்தேன்.

இந்திய அமைதி காக்கும் படை வருவதற்கு முன்னர், வடமராட்சி நடவடிக்கையின் நான்கு படைப்பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிடும் அதிகாரியாகப் பணிபுரிந்தேன். இது அப்போது செயற்பாட்டில் இருந்த மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகிய சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணக் கோட்டையை விடுவிக்க முதல் இரண்டு படைப்பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிட்டேன். வெலிஓயா, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் பல முக்கிய பணிகளைச் செய்தேன். அதற்காக ரணசூர (போர்வீரர்) மற்றும் ரண விக்ரம (போர்வீரர்) பதக்கங்களையும் ஜனாதிபதி விருதுகளையும் பெற்றேன்.

பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நேரடியாகப் பங்களித்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நான் பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை, ருவன்வெலி மஹா சேயவுக்கு முன்பாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது அறிவித்தேன்.

என்னை இந்த நாட்டின் முதல் குடிமகனாக ஆக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளைச் செய்த சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பூரண பொறுப்பு எனக்கு உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்காக நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், நான் பெற்ற பௌத்த போதனைகளும் உத்வேகமும், இந்நாட்டின் ஏனைய சகோதர மதத்தினரும் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை நான் ஏற்படுத்தியுள்ளேன் என்பதையும் விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

மதிப்பிற்குரிய தேரர்களே,
நான் ஜனாதிபதியாவதற்கு முன்னர், கூரகல புண்ணிய பூமி, முஹுது மஹா விகாரை, தீகவாபி புண்ணிய பூமி போன்ற எமது பௌத்த விஹாரைகள் இருந்த விதம், அங்கு தங்கியிருந்த பிக்குகள் எவ்வாறு நடத்தப்பட்டனர், அந்த விஹாரைக்குரிய காணிகளின் நிலைமை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த விஹாரைகளின் தற்போதைய நிலை குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய முடியும்.

எனது ஆட்சிக் காலத்தில், நமது புராதன பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயல் ரீதியாக உறுதியளித்துள்ளோம். இரண்டு வருடங்களாக உலகளாவிய தொற்றுப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு எம்மால் முடிந்தது. ஆனாலும், அது ஏற்படுத்திய சில பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள், இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக ஒருசிலர் என்னை அவமானப்படுத்தினாலும் அதைத் தாங்கும் சக்தி என்னிடம் உள்ளது.

மேலும், என்னை அவமதிக்கும் எவரும் என் வாழ்நாளில் நான் இந்நாட்டுக்குச் செய்த சேவைகளில் ஒரு சிலதையாவது செய்யாதவர்களே ஆவர்.

இவ்வுலகில் அவமானம் அல்லது புகழை மட்டுமே பெற்ற எவரும் இல்லை என்று புனித பௌத்த போதனை தம்மபதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் என்பதை இத்தருணத்தில் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். பல்லாயிரம் வருட வரலாற்றைக் கொண்ட சிங்களக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். எனவே, நமது விழுமியங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அனுசரணை வழங்கும்.

வரலாறு முழுவதும் இந்த நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும், தமது சமய மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாத்து கௌரவத்துடன் வாழ்வதற்கு உள்ள உரிமையை நான் எப்போதும் நிலைநாட்டுவேன்.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இதுவரை நாம் எதிர்கொண்ட தடைகளைக் கடந்து, புதிய பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

அதற்காகக் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்பதை, இந்தச் சங்கைக்குரிய மற்றும் மரியாதைக்குரிய மஹா சங்கத்தினரின் முன்னிலையில் பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால் இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவப் பட்டத்தையும் ஆசிகளையும், பணிவான கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மலர்ந்த புத்தாண்டு, சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர்களுக்கும் அனைத்து மஹா சங்கத்தினருக்கும், உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த மகிழ்ச்சிமிக்க ஆண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

மும்மணிகளின் ஆசிகள்!

Sun, 01/02/2022 - 20:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை