ரஷ்யப் பதற்றத்திற்கு இடையில் நேட்டோ படை தயார் நிலையில்

8,500 அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்தத் திட்டம்

ரஷ்யாவுடனான பதற்ற சூழலில் நேட்டோ தனது படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதோடு தென் கிழக்கு பக்கமாக மேலதிக துருப்புகள் அனுப்பப்படக் கூடும் என்றும் மேலதிக போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் கிழக்கு ஐரோப்பா பிராந்தியம் பலப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உக்ரைன் விவகாரம் தொடர்பிலான பதற்றத்தை இது அதிகரிப்பதாக ரஷ்யா கண்டித்துள்ளது.

அண்மைய நாட்களில் கூட்டணி நாடுகளின் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகளை வரவேற்ற நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டொல்டன்பேர்க், நேட்டோ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் எல்லைக்கு அருகில் 100,000 துருப்புகளை ரஷ்யா நிலைநிறுத்தி இருக்கும் நிலையில் மேற்கத்தேய நாடுகளின் இந்த நடவடிக்கைகள் அந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

'எமது பாதுகாப்பு நிலையில் ஏற்படும் எந்த ஒரு ஆபத்தான சூழலுக்கும் எமது கூட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவது உட்பட நாம் எப்போதும் பதில் நடவடிக்கையை மேற்கோண்டு வருகிறோம்' என்று ஸ்டொல்டன்பேர்க் வெளியட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நேட்டோ கிழக்கு பக்கத்தில் தனது நிலையை அதிகரிப்பதில் மேலதிக நேட்டோ போர்ப்படைகளை நிலைநிறுத்துவதும் அடங்கும் என்று அவர் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

'கூட்டணியின் தென்கிழப்புப் பக்கமாக போர்க் குழுக்களை ஏற்படுத்துவது பற்றியும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு மற்றும் உளவு மற்றும் கண்காணிப்பு பிரிவுகளின் உதவியுடன் எஸ்தோனியா, லிதுவேனியா, லத்வியா மற்றும் பொலந்தில் சுமார் 4,000 பன்னாட்டு துருப்புகளை நேட்டோ நிலைநிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு பற்றியை கூற்றை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. எனினும் ரஷ்ய துருப்புகள் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பக்கமாக சுற்றி வளைத்த நிலையில் உள்ளன. இந்நிலையில் மேற்கத்தேய நாடுகளின் பதில் நடவடிக்கைகள் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது என்று ரஷ்யா கூறகிறது.

ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதற்கு தயாராக 8,500 துருப்புகளை உஷார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. எனினும் துருப்புகளை நிலைநிறுத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பெண்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைக்குவிப்புக்கு பதில் அளிப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய தலைவர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் கடந்த திங்கள் பின்னேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவுக்கு துருப்புகள், விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்புவது பற்றி டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகள் திட்டமிட்டிருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. உக்ரைன் போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கெரி மற்றும் ருமேனியா ஆகிய நான்கு நேட்டோ நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது.

உக்ரைனுக்குள் துருப்புகளை அனுப்புவது பற்றி போலந்து திட்டத்தை வகுத்திருப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதற்ற சூழலில், உக்ரைனில் உள்ள தூதரகத்தில் உள்ள சில ஊழியர்கள் மற்றும் சார்ந்திருப்போரை பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டதோடு அமெரிக்காவும் அதன் உக்ரைன் தூதரக பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை வெளியேறுவதற்கு உத்தரவிட்டது.

Wed, 01/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை