டொங்காவுக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன

கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்படை அடுத்து சுனாமி தாக்கியும் சாம்பல் புகையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் டொங்கா நாட்டுக்கு பல நாடுகளும் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி வரும் நிலையில் சர்வதேச உதவிகள் குவிய ஆரம்பித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எரிமலை வெடிப்பை அடுத்து டொங்காவில் மூவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அந்த பசிபிக் தீவு நாட்டில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியதோடு தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எனினும் பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாக தெரியாத நிலையில் உள்ளது.

பிரதான விநியோகங்களை ஏற்றிய முதலாவது கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் இருந்து டொங்காவை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் 250,000 லீற்றர் நீர் மற்றும் ஏனைய பொருட்கள் அடங்குகின்றன. சுத்தமான நீர் முக்கிய தேவையாக இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டது.

மறுபுறம் அவுஸ்திரேலியா அனுப்பிய மிகப்பெரிய கப்பல் ஒன்று நேற்று டொங்காவை நோக்கி பயணித்தது. ஹெலிகொப்டர்களை சுமந்து வரும் இந்தக் கப்பலில் இருந்து டொங்காவின் ஏனைய சிறு தீவுகளுக்கு ஹெலி மூலம் உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வார நடுப்பகுதியிலேயே இந்தக் கப்பல் டொங்கா நாட்டை அடையவுள்ளது.

உதவிகளை ஏற்றிய பிரிட்டன் கப்பல் ஒன்றும் டொங்கா நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. உதவிகளை ஏற்றிய ஜப்பான் இராணுவ விமானம் ஒன்று நேற்று டொங்காவில் தரையிறங்கியது. சீனாவும் டொங்காவுக்கு நிவாரண நிதி உதவியாக 100,000 டொலர்களையும் ஒரு தொகுதி அவசர விநியோகங்களையும் வழங்க உறுதி அளித்துள்ளது.

 

Sat, 01/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை