முதலாவது உதவி விமானம் டொங்காவை சென்றடைவு

பசிபிக் நாடான டொங்காவுக்கு தேவைப்படும் உணவு மற்றும் நீரை ஏற்றிய முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் நேற்று அந்நாட்டை அடைந்துள்ளது.

டொங்காவின் பிரதான விமான நிலையத்தை மூடிய எரிமலைச் சாம்பல் அதன் ஓடு பாதையில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து அங்கு நியூசிலாந்து இராணுவ விமானம் தரையிறங்கியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அனுப்பிய ஏனைய விமானங்கள் மற்றும் கப்பல்கள் டொங்காவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை கடலுக்கு அடியில் இடம்பெற்ற பாரிய எரிமலை வெடிப்பினால் அருகில் இருக்கும் டொங்கா நாட்டை சுனாமி அலை தாக்கியதோடு அந்த நாட்டை சாம்பல் சூழ்ந்ததால் பெரும் சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தது மூவர் உயிரிழந்திருப்பதோடு தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களின் பின்னரே சர்வதேசத்துடனான தொடர்பாடல் நிறுவப்பட்டுள்ளது.

தலைநகர் நுகுவாலோபாவில் உள்ள விமானநிலைய ஓடுபாதையில் சாம்பல் படிந்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தள்ளுவண்டிகள் மற்றும் மண்வாரிகளை பயன்படுத்தி பல நாட்கள் போராடி ஓடுபாதையில் இருக்கும் சாம்பலை அகற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சி–130 ஹெர்கியுலஸ் விமானம் நீர் கொள்கலன்கள், தற்காலிக கூடாரங்கள், மின் பிறப்பாக்கிகள், சுகாதார மற்றும் குடும்ப சாதனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களுடன் டொங்காவில் தரையிறங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து உதவிப் பொருட்கள் மற்றும் சாம்பலை அகற்றுவதற்கான சாதனங்களுடன் அவுஸ்திரேலியாவின் இரு போயிங் சி–17 கிளோப்மாஸ்டர் விமானங்கள் நேற்று டொங்காவை சென்றடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

Fri, 01/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை