கசகஸ்தான் ஆர்ப்பாட்டம்: உதவிக்கு ரஷ்யப் படை; இராணுவத் தாக்குதலில் பலர் பலி

கசகஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நாட்டின் “ஸ்திரத்தன்மையை” உறுதி செய்வதற்கு ரஷ்யா தலைமையிலான துருப்புகள் அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளன.

நாடெங்கும் பதற்ற சூழல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த முறையின் கீழ் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டொகாயேவ் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோதும் அரசியல் குறைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அங்கு பல அரச கட்டடங்களும் தீ வைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் அமைதி ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையில் பல டஜன் அரச எதிர்ப்பு கலகக்காரர்கள் கொல்லப்பட்டதாக கசகஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் பிரதான நகரான அல்மட்டியில் உள்ள பொலிஸ் நிலையங்களை கைப்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றதை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒன்றுகூடல்களுக்கு தடை உட்பட நாட்டில் அவசர நிலையை ஜனாதிபதி பிரகடணம் செய்துள்ளார்.

எனினும் துருப்பினர் மற்றும் ஆயுதம் ஏந்தியவர்கள் குவிக்கப்பட்டிருந்தபோதும் அல்மட்டியின் பிரதான சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

துருப்பினர் இந்த கூட்டத்தை நெருங்கிய நிலையில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய நாடான கசகஸ்தான் வடக்கே ரஷ்யாவையும் கிழக்கே சீனாவையும் கொண்டிருப்பதோடு பரந்த எண்ணெய் வளத்தையும் பெற்றிருப்பதால் பிராந்திய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் உள்ளது.

Fri, 01/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை