இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்

சபையில் ஸ்ரீதரன் MP வலியுறுத்து

பொருளாதார நெருக்கடி நிவர்த்தி செய்யப்பட்டு நாடு சீரான பாதையில் பயணிக்க வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது மிக அவசிமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி எஸ்.ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்காக ஜனாதிபதியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், அப்போதுதான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிறிதரன் எம்பி இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நிகழ்த்திய விளக்க உரையில் தமிழ் மக்கள் கவனத்திற் கொள்ளப்பட வில்லை. அது தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்லும் வகையிலான உரையல்ல.

அவரது சிந்தனை ஒருமுகமாக இருப்பதையே காண முடிகிறது. நாடு சீரான பாதையில் பயணிக்க வேண்டுமானால் நீண்டகாலம் நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்று கொள்கை விளக்க உரை நிகழ்த்தியிருந்தார். அதேபோன்று இம்முறை பாராளுமன்றத்தில் அவர் கொள்கை விளக்க உரையை ஆற்றினார். இரண்டையும் நாம் நோக்கும் போது அவற்றில் தமிழ் மக்கள் தொடர்பில் கவனிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

அண்மையில் காலம் சென்ற மனித உரிமை ஆய்வாளர் டெஸ்மன் டுட்டு, உலக விடுதலை வரலாற்றில் நீக்கப்பட முடியாத பெயரான நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் நல்லிணக்கத்தின் வரைவிலக்கணமாக செய்யப்பட்டார்கள்.

நாட்டில் பெரும்பான்மை இனத் தலைவர்களும் நாட்டு மக்களும் அது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிறைத்தண்டனை உட்பட பல்வேறு அவலங்களை அனுபவித்த அந்தத் தலைவர்கள் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் எந்தளவு தியாகத்துடன் செயற்பட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

நாட்டின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நியாயமாகவும் நேர்மையாகவும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 01/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை