இரண்டு மூன்று வாரங்களில் நிலைமை மோசமடைய வாய்ப்பு

விசேட மருத்துவ சங்கம் எச்சரிக்கிறது

 

நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவும் நிலையில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பெருமளவு தொற்றாளர்கள் இனங் காணப்படலாம் என விசேட மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனைக் கருத்திற் கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும் நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் அந்த சங்கம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் டெல்டா திரிபு வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் மோசமானதாகவும் மிக வேகமாக பரவக்கூடியதாகவும் காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் மக்களின் நடமாட்டத்தை அவதானிக்கும்போது ஓரிரு வாரங்களில் பெருமளவு வைரஸ் தொற்றாளர்கள் உருவாவதை தடுக்க முடியாமற் போகும் என்றும் இதனால் சுகாதாரத் துறைக்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தும் நிலை உருவாகலாம் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

அதேவேளை நாட்டில் இதுவரை 25 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஓமிக்ரோன் திரிபு வைரஸ் காரணமாக மிக மோசமான நோய்கள் ஏற்படலாம் என்றும் அதனால் வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ள மேற்படி சங்கம், அதனை தவிர்க்கும் வகையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை