இராஜாங்க அமைச்சு பதவி எனக்கு இழப்பல்ல நாளையே சொந்தத் தொழிலை ஆரம்பிப்பேன்

நடந்தது எனது எதிர்கால அரசியலுக்கான ஆசீர்வாதமே -முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில்

இராஜாங்க அமைச்சுப் பதவி இழப்பு எனக்கு பெரிதல்ல. நாளையே நான் எனது சொந்தத் தொழிலுக்கு செல்லப்போகிறேன் என்று பதவி விலக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
தான் அன்று கொள்வனவு செய்த லொத்தருக்கு இப்போது பரிசு கிடைத்துள்ளதாகவும் அவர்

தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட சுசில் பிரேம் ஜயந்த , அமைச்சிலிருந்து வெளியேறும்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினர். கேள்வி: - இராஜாங்க அமைச்சரே உங்களுக்கு என்ன நடந்தது?

பதில்-: எனக்கு எதுவும் நடக்கவில்லை. இன்று காலை எனது இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டதாக அறிய முடிந்தது. அது எனக்கு பெரிய விடயமல்ல. நான் 2000 ஆம் ஆண்டு அமைச்சராகினேன். பாராளுமன்றத்திற்கு வந்தவுடனேயே எனக்கு அமைச்சு பதவி கிடைத்தது. மூன்று ஜனாதிபதியின் கீழ் நான் கடமை புரிந்துள்ளேன். எனக்கென்று சொந்தமாக சட்டத்தரணி தொழிலுள்ளது. நாளை முதல் நான் அதனை மேற்கொள்வேன்.

கேள்வி: - இராஜாங்க அமைச்சர் பதவியை நீக்கப் போவதாக உங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதா?

பதில்: - அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஊடகங்கள் மூலமே அதனை அறிந்துகொள்ள முடிகின்றது.

கேள்வி: - உங்கள் பதவி விலக்கலுக்கு கூறப்படும் காரணமென்ன?

பதில்:- அவ்வாறு காரணங்களைக் கூறவேண்டி அவசியமில்லை. நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு ஒருவரை நியமிக்கவோ அவரை விலக்கவோ அதிகாரம் உண்டு.

கேள்வி: - உண்மையில் என்ன நடந்தது?

பதில்: - நேற்றுமுன்தினம் நான் சந்தைக்கு சென்ற போது ஊடகவியலாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். பச்சைமிளகாய் ஒரு கிலோ 1200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர். அதற்கு நான் நாட்டின் விவசாய துறை பெயில். மேற்கொண்டுள்ள கொள்கையும் பெயில் எனத் தெரிவித்தேன். அதனை நான் மக்கள் சார்பிலேயே தெரிவித்தேன்.

கேள்வி:- இதற்கு முன்னரும் சில அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சித்துள்ளனரே?

பதில்: - அமைச்சரவையில் இதுபற்றி ஏதாவது பேசப்பட்டிருக்கும் என நினைக்கின்றேன். அதற்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது என்பது தெரிகிறது.

கேள்வி: - அரசாங்கத்திலிருந்து விலகி நீங்கள் என்ன செய்ய தீர்மானித்துள்ளீர்கள்?

பதில்: - அரசாங்கம் என்ற வகையில் நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம். அரசியல் என்ற வகையில் நான் எனது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றியுள்ளேன். அதனால் இப்போது நடந்தவை எனது எதிர்கால அரசியலுக்கான ஆசீர்வாதமாக முடியும், என அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை