ஐ.நா நிலுவையைச் செலுத்தாத ஈரானின் வாக்குரிமை நிறுத்தம்

உறுப்பு நாடுகளுக்கான செலுத்தப்படாத நிலுவை காரணமாக ஈரான், வெனிசுவேலா மற்றும் சூடான் உட்பட எட்டு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்குரிமையை இழந்துள்ளன.

மொத்தம் 11 நாடுகள் கட்டணம் செலுத்துவதில் தவறி இருப்பதாக செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், கடந்த செவ்வாய்க்கிழமை பொதுச் சபைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா சாசனத்தின்படி, உறுப்பு நாடு ஒன்றின் இரண்டு ஆண்டுகள் செலுத்த வேண்டிய தொகைக்கு இணையாக அல்லது அதற்கு அதிகமான நிலுவை இருக்கும்போது அந்த நாட்டின் வாக்குரிமை இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள கடன் “உறுப்பினரின் அப்பால்பட்ட நிபந்தனைகள் காரணமானது” எனக் கருதப்பட்டால், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வக்களிக்க சபை அனுமதிக்கும்.

இதனடிப்படையில் கொமொரோ தீவுகள், சாவோ டொம் மற்றும் பிரின்ஸ், சோமாலியா நாடுகளுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஈரான், சூடான், வெனிசுவேலா, அன்டிகுவா மற்றும் பார்படோஸ், கொங்கோ, கினியா, பப்புவா நியுகினி மற்றும் வனுவாட்டு ஆகிய எட்டு நாடுகளின் வாக்குரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் தமது வாக்குரிமையை மீட்டுக்கொள்வதற்கு குறைந்தபட்ச தொகையை செலுத்தும்படி குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். இதில் ஈரான் 18 மில்லியன் டொலர் செலுத்த வேண்டிய அதேநேரம் சூடான் சுமார் 300,000 டொலர்களும் வெனிசுவேலா சுமார் 40 மில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டி உள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் கடந்த ஆண்டிலும் ஈரான் வாக்குரிமையை இழந்தது. எனினும் அமெரிக்க பொருளாதாரத் தடையால் குறைந்தபட்சத் தொகையைக் கூட செலுத்த முடியாதிருப்பதாக ஈரான் கூறியது. எனினும் பல மாத பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க திறைசேரி தடையில் விலக்கு அளித்ததை அடுத்து கடந்த ஜூனில் ஈரானுக்கு மீண்டும் வாக்குரிமை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை