இலங்கை – துருக்கியிடையேவர்த்தக தொடர்பு மேம்பாடு

ஜனாதிபதியுடன் துருக்கி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்று (28) ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வர்த்தக நடவடிக்கைகளைப் பல்வகைப்படுத்தல் மூலம் இலங்கையின் பல்வேறு தயாரிப்புகளுக்கு, துருக்கி சந்தைகளில் பரந்தளவிலான வாய்ப்புகள் கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தமது நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு துருக்கி ஜனாதிபதியின் வாழ்த்துகளைத் தெரிவித்த மெவ்லூட் சவ்சோக்லு , கடந்த ஆண்டு துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு விடுத்திருந்த அழைப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.

இலங்கையில் கொவிட்19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உட்பட உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகத் துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஆர்.டிமெட் செக்கர்சிஓக்லு (R.Demet Sekercioglu), விசேட ஆலோசகர் கொரே எர்டஸ் (Koray Ertas), ஊடகப் பேச்சாளர் டன்ஜூ பில்ஜிக் (Tanju Bilgic) மற்றும் தூதரகப் பிரதானி முஹம்மது பிலால் சக்லம் (Muhammed Bilal Sagalm), வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Sat, 01/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை