சந்திரிகா, முன்னாள் அமைச்சர்கள் உள்ளடங்கிய புதிய கட்சி உதயம்

புதிய அரசியல் கட்சியொன்றை அடுத்த மாத முதற்பகுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன் போசகராக செயற்பட இருப்பதோடு முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் இதில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

எமது கட்சியின் தலைமைக்காரியாலயம் எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படும். புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவும் அனைவரும் சமத்துவமாக வாழும் அமைதியான சூழல் ஒன்றை கட்டியெழுப்புவதற்கும் உகந்த சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று நாட்டுக்கு தேவைப்படுகிறது.இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் எமது புதிய கட்சி உதயமாகிறது.

இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும். அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும்.அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங்கள் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

Mon, 01/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை