இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து சூடான் பிரதமர் இராஜினாமா

சூடான் தலைநகர் கார்டூமில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹம்தொக் பதவி விலகியுள்ளார்.

கடந்த ஒக்டோபரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்துடனான அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும்படி கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் முழுமையான சிவில் அரசொன்றுக்காக அழைப்பு விடுத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இராணுவம் தனது படை பலத்தை பயன்படுத்திய நிலையில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஹம்தொக் பதவி விலகி இருப்பதால் நாட்டின் அதிகாரம் இராணுவத்தின் கையில் முழுமையாக வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் சூடானின் நீண்ட காலத் தலைவரான ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து நாட்டில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் பலவீனமாக முயற்சியில் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு பின்னடைவாக இது உள்ளது.

தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய ஹம்தொக், “நாட்டின் முழு இருப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான திருப்புமுனையாக இது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு பேரழிவை நோக்கி சரிவதை தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சித்ததாகவும், ஒருமித்த நிலைப்பாடாக இருந்தபோதும் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமராக மீண்டும் பதவிக்கு அமர்த்தப்பட்ட ஹம்தொக்குடன் கடந்த நவம்பரில் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, தேர்தல் நடத்தப்படும் வரை நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு தலைமை அவர் வகிப்பார். எனினும் புதிய சிவில் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் இராணுவத்தை நம்ப முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

தலைநகர் கார்டூம் மற்றும் ஒம்துமான் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்களில், இராணுவத்தை அரசியலில் இருந்து வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

இராணுவ சதிப்புரட்சி தொடக்கம் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஞாயிறன்று இருவர் கொல்லப்பட்டதும் அடங்கும்.

எனினும் சிவில் யுத்தம் ஒன்றை தவிர்ப்பதற்காகவே இராணுவ சதிப்புரட்சி நடத்தப்பட்டதாக அந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை வகித்த ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹான் நியாயப்படுத்தியுள்ளாார். 2023 ஜூலையில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதோடு சூடான் சிவில் அரசுக்கான ஆட்சி மாற்றத்தில் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 01/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை