மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலையை கண்டித்து கடையடைப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால்  தீர்மானிக்கப்பட்ட  மாட்டிறைச்சி விற்பனை செய்ய நிர்ணயித்துள்ள விலையை கண்டித்து இன்று (18) முதல்  ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட  அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக வரையறுக்கப்பட்ட கால்நடை இறைச்சி விநியோக தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எம். கமால் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், கலவன் இறைச்சி 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபரின் தலைமையில் கடந்த 16 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் எமது சங்கத்திலுள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது நியாயமான காரணங்களை முன்வைத்த போதும் பிரதேச சபை அதனை மறுத்து தன்னிச்சையாக மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலையை மக்கள் மத்தியில் அறிவித்துள்ளது.

இதனால் எமது தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தட்டுப்பாடு, வெளிப் பிரதேசங்களுக்கு மாடுகள் ஏற்றுமதி, மாட்டிற்கான விலை அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு எமது  சங்கத்தினால் ஒரு கிலோ தனி இறைச்சி 1,100 ரூபாய், இறைச்சி முள்ளுடன் 1,000 ரூபாய், ஒரு கிலோ ஈரல் 1,200 ரூபாய், பாபத் ஒரு கிலோ 500 ரூபாய், எனும் விலைகளில் விற்பனை செய்ய எமது சங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே, எமது இறைச்சிக் கடை உரிமையாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவர்களது தொழில் பாதிப்படையாமல் ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் நியாயமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

தங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளை இன்று முதல் மூட தீர்மானித்துள்ளோம் என்று வரையறுக்கப்பட்ட கால்நடை இறைச்சி விநியோக தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.கமால் மேலும் தெரிவித்தார்.

(எச்.எம்.எம். பர்ஸான்)

Tue, 01/18/2022 - 20:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை