நாளாந்த எரிவாயு தேவை இவ்வார இறுதிக்குள் பூர்த்தி

லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் உறுதியளிப்பு

உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வெளிநாட்டிலிருந்து இயந்திரங்கள் வரவழைப்பு

 

இந்த வார இறுதிக்குள் நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை நாட்டுக்கு கொண்டுவந்து நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வீடுகளில் முத்திரையுடன் உள்ள எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பில்  இன்று (03) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எரிவாயுவை ஏற்றிய 02 கப்பல்கள், சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையங்களை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தையின் தேவைகளில் 80 வீதமான எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் விநியோகித்து வருவதோடு நுகர்வோர் அதிகார சபையின் தரம் மற்றும் கண்காணிப்பின் கீழ் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இதற்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட நீலம் மற்றும் கறுப்பு நிற முத்திரையிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவதற்கான தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.எதிர்காலத்தில் தாமதமின்றி எரிவாயுவை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுவதோடு உலக சந்தையில் எரிவாயுவிலை உயர்ந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.2,750 ரூபாவாகவும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை ரூ.1,101 ரூபாவாகவும் 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.520 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இருந்தும் சந்தையில் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதோடு கலவை தொடர்பான குழப்பம் காரணமாக அநேக சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.இந்த நிலையில் எரிவாயு சிலிண்டரின் தரம் குறித்து ஆராய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததோடு சந்தையில் இருந்த சிலிண்டர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கேள்வியை விட குறைவாகவே சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையில் தொடர்ச்சியாக எரிவாயு பெற நீண்ட வரிசை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மக்கள் மாற்று வழிகளை நாட ஆரம்பித்துள்ளதோடு மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கும் விறகு அடுப்புகளுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.எரிபொருள் இன்றி நூற்றுக்கணக்கான ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லாப் ​கேஸ் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் லிட்ரோ கேஸுக்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு இரண்டு தினங்களுக்கும் ஒரு தடவை, சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வரும் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பிய பின்னர் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Mon, 01/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை