புடின் மீது தடை அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடு உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேநேரம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தமக்கு இல்லை என ரஷ்யா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, உக்ரைனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வொஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதியிடம் ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பைடன், 'ஆம்' என்று பதிலளித்தார். மேலும் புடின் அப்படி தாக்குதல் நடத்தினால் அதை செய்வதைப் பரிசீலிப்போம் என்று பைடன் தெரிவித்தார்.

அதேசமயம், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்பும் திட்டம் குறித்து தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தற்போதைய பதற்றம் குறித்து ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டு இராஜதந்திரிகள் பாரிஸ் நகரில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு உக்ரைனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதிருந்து, உக்ரைனின் இராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது.

Thu, 01/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை