ரஷ்யப் படை உக்ரைனுக்குள் நுழையும்: பைடன் நம்பிக்கை

உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் எனக் கருதுவதாகவும் எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் கேட்டபோது, “அவர் உள்ளே நுழைவார் என்பது என் கணிப்பு. அவர் ஏதாவது செய்தாக வேண்டியுள்ளது” என்றார் பைடன்.

உக்ரைன் மீது போர் தொடுப்பதாக வெளியாகும் தகவலை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் எல்லையோரத்தில் சுமார் 100,000 படைகளை ரஷ்யா குவித்துள்ளது.

உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, போலந்து உள்ளிட்ட நாடுகளில் நேட்டோ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேற்கத்தேய நாடுகள் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான திருப்பம் ஒன்றை எட்டுவதற்கு தவறியுள்ளது. ரஷ்யாவின் சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் ஜெனீவாவில் இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். “ரஷ்யா மிகக் குறுகிய அறிவித்தலில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக் கூடும்” என்று பிளின்கன் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், “எந்த நாடு என்ன செய்ய முன்வரும் என்பது பற்றி நேட்டோவில் முரண்பாடு உள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து அது அமையும்.

“ரஷ்யப் படை எல்லையை கடந்தால் அனைத்தும் மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டார்.

Fri, 01/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை