எதிர்கொள்ள நேரும் மருந்துத் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு உச்சளவில் நடவடிக்கை

 இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் பிரசாரம் செய்வது போல் நாட்டில் தற்போது எவ்வித மருந்துத் தட்டுப்பாடும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் அவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில்  உச்சளவிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் உச்சகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முக்கிய அதிகாரிகளுடன் மருந்து கொள்வனவு தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். அதன் போது எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை தமக்குப் பெற்றுத்தருமாறு அமைச்சர் அந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். (ஸ)

 

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Fri, 01/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை