நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூவரில் சிறுமி சடலமாக மீட்பு

இருவரை தேடும் பணிகள் தீவிரம்

ஹங்வெல்ல - தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல்போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், காணாமல் போன மூவரில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெந்தலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 மற்றும் 29 வயதுடைய இருவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குமாரி நீர்வீழ்ச்சியில் நேற்றுமுன்தினம் மதியம் 3 இளைஞர்கள் மற்றும் 5 சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த போது கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.இதன்போது 14,16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை