"வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்தேன்"

அமெரிக்காவில் உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

பல்டிமோரில் மருத்துவர்களால் சோதனை நடவடிக்கையாக ஏழு மணி நேரம் செய்யப்பட்ட சத்திரசிகிச்சைக்கு மூன்று நாட்களின் பின்னரும் 57 வயதான டேவிட் பென்னட் என்பவர் நல்ல நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பென்னட்டின் உயிரை காப்பதற்கான கடைசி எதிர்பார்ப்பாகவே இந்த இதய மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த சிகிச்சை மூலம் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான சாத்தியம் பற்றி உறுதி செய்யப்படவில்லை.

“இந்த உறுப்பு மாற்று சிகிச்சை வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது” என்று சத்திரசிகிச்சைக்கு ஒரு தினத்திற்கு முன்னர் பென்னட் தெரிவித்திருந்தார். “இது இருளில் இலக்கை நோக்கி அடிப்பது போன்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இது எனது இறுதி வாய்ப்பு” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திருப்புமுனையாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திரசிகிச்சை பல ஆண்டுகள் இடம்பெற்ற பரிசோதனைகளின் உச்சகட்ட நடவடிக்கையாகவே இது இடம்பெற்றது. இது இந்த சத்திரசிகிச்சை உறுப்பு பற்றாக்குறையை தீர்ப்பதை ஒரு படி நெருங்கச் செய்திருப்பதாக சத்திரசிகிச்சை நிபுணர் பார்ட்லி கிரிப்பித் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உறுப்புமாற்று சத்திரசிகிச்சைக்கு காத்திருப்பவர்களில் நாளுக்கு 17 பேர் உயிரிழப்பதோடு அந்தப் பட்டியலில் 100,000க்கும் அதிகமானவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தேவையைப் பூர்த்தி செய்ய செனோடிரான்ஸ்பிளன்டேஷன் என்று அழைக்கப்படும், விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்டகாலமாக கருதப்படுகிறது. மேலும், பன்றியின் இதய வால்வுகளை பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானதாக உள்ளது.

Wed, 01/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை