ரஷ்யா மீதான தடைகள் பற்றி பைடனை எச்சரித்தார் புடின்

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.

இருநாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த தொலைபேசி அழைப்பில், புடின், பைடனை மேற்கூறியபடி எச்சரித்தார்.

இதில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பாதுகாப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையில் மொஸ்கோ உறுதியான முடிவுகளை எதிர்பார்ப்பதாக புடின் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறினார்.

அதே அழைப்பில் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார் ஜோ பைடன்.

உக்ரைனின் கிழக்கு எல்லையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய தரப்போ தன் நாட்டு எல்லைக்குள் தன் துருப்புகளை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ள தங்களுக்கு சுதந்திரமுள்ளது என்கிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுக்க எந்தவித திட்டமும் இல்லை என்றும் மறுத்துவருகிறது.

உலகின் இரு முக்கிய நாட்டு ஜனாதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதற்றம் புதியதல்ல. 2014 உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ஆரம்பிக்கப்பட்ட பிரிவினைவாத போராட்டத்தில் சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டதோடு அங்கு அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன.

உக்ரைனுக்குள் ரஷ்யா மீண்டும் துருப்புகளை அனுப்பினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் எச்சரித்துள்ளன.

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை