2024க்குள் குடிசைவாசிகள் அனைவருக்கும் வீட்டு வசதி

நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டம்

2024 ஆம் ஆண்டுக்குள், நகர்ப்புறங்களிலுள்ள குடிசைவாசிகளுக்கு முறையான வீட்டு வசதிகளை வழங்கும் வகையில் இடமாற்றம் செய்யும் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, கொழும்பு நகர மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிசைகள், சேரிகள் அல்லது பாழடைந்த பழைய வீட்டுத் திட்டங்களில் வாழ்கின்றனர். இது நகரத்தின் மொத்த நிலப்பரப்பில் ஒன்பது சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் 40,000 குடிசைவாசிகளில் சுமார் 23,000 பேருக்கு ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமான பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

திறைசேரியிலிருந்து பெறப்பட்ட நிதியில் எஞ்சியிருக்கும் குடிசைவாசிகளுக்கு சுமார் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

குடிசைவாசிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் தொடங்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இதற்கான நிதி பெறப்படுகிறது.

மேலும், 2,996 வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன நிதி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மேலும் 13,000 வீடுகளைக் கட்டி, ஏப்ரல் 2022 க்குள் குடிசைவாசிகளை இடமாற்றம் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Thu, 01/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை