லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு. தயாரத்ன
2020 ஆம் ஆண்டில் நாம் பல சவால்களுக்கு முகம் கொடுத்தது போன்று 2022 இல் எதிர்கொள்ள இருக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராகவுள்ளதாக லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு. தயாரத்ன தெரிவித்தார்.
புதுவருடத்தையொட்டி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நிறுவனத்தின் தலைவராக பதவியேற்ற நான் சம்பிரதாயபூர்வமாக மூன்றாவது தடவையாக வருட ஆரம்பத்தில் உரையாற்றுகிறேன். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இலங்கையில் பரவிய தொற்று காரணமாக இரண்டு வருடங்கள் லேக் ஹவுஸ் நிறுவன நாளாந்த நடவடிக்கைகள் முற்றாக பாதிப்படைந்து பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அதனால் அக்காலப்பகுதியில் நாம் ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமானளவு வருமானத்தை இழந்தோம். கஷ்டமான நிலையில் திறைச்சேரியிலிருந்து எமக்கு நிதியை பெற்றுக்கொடுத்த ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் பீ விஜயவீர ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று , நிறுவனத்தின் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்த பணிப்பாளர் குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பத்திரிகையை கொழும்பில் இருந்து கதிர்காமம் வரை கொண்டு செல்வதற்கு புதிய கொழும்பு கதிர்காம பஸ் சேவையை ஆரம்பித்துள்ளோம். அதற்காக நாம் இரண்டு பஸ்களை கொள்வனவு செய்துள்ளோம். அது மாத்திரமல்ல நிறுவன ஊழியர்களின் போக்குவரத்துக்காக வேன் ஒன்றையும் விலைக்கு வாங்கி உள்ளோம்.
வருடாந்தம் நடத்தப்படும் மிகிந்தலை ஒளியேற்றும் நிகழ்வும் வழமைபோன்று நடைபெற்றது. அதற்காக நாம் அனுசரணையாளர்களை பெற்றுக் கொண்டோம். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிறுவன ஊழியர்களின் பீ.சீ.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளின் பணத்தையும் பெற்றுக் கொடுத்தோம். நோயால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு ஹோகந்தர காணியில் உள்ள கட்டிடத்தில் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். கொவிட் தொற்றுக்குள்ளான அனைவருக்கும் 5000 ரூபா பெறுமதி வாய்ந்த வவுச்சர்களையும் வழங்கினோம்.
எமது நிறுவனத்தின் மின்சார தேவைக்காக 4 மில்லியன் ரூபாவை மாதாந்தம் செலவிடுகிறோம். அதனை குறைக்க எதிர்காலத்தில் சூரிய மின்சக்தியை (solar power) பயன்படுத்தி அதன் மூலம் 2 .5 மில்லியன் ரூபாவை மாதாந்தம் சேமிக்க எண்ணியுள்ளோம்.
ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஊழியர் சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிர்வாக சபை நடவடிக்கை எடுக்கும் என்றார்..
from tkn