நைஜீரிய கிராமங்கள் மீது தாக்குதல்; 200 பேர் பலி

நைஜீரியாவின் வடமேற்கு சம்பாரா மாநிலத்தில் ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் 100க்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதன்போது ஆயுததாரிகள் வீடுகளுக்கு தீவைத்து, கொல்லப்பட்ட உடல்களை சிதைத்துள்ளனர். ஆயுததாரிகள் கண்ணில் பட்டவர்கள் மீது சூடு நடத்தியதாக தாக்குதலுக்கு இலக்கான கிராமம் ஒன்றைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கொள்ளைக்காரர்கள் என்று அரசினால் அழைக்கப்படும் உள்ளுர் குற்றக் குழுக்கள் மீது மத்திய அரசு போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் இடம்பெறும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவுகளில் ஒன்பது கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 300 ஆயுததாரிகள் 100க்கும் அதிகமானவர்களை கொன்றதாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டது.

இதன்போது 2,000க்கும் அதிகமான கால்நடைகளை தாக்குதல்தாரிகள் திருடிச் சென்றதாக கிராமம் ஒன்றைச் சேர்ந்த இடி மூசா என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Mon, 01/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை