கொவிட்-19 தொற்று: பல நாடுகளும் வட்டார நோயாக செயற்பட ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொவிட்–19 நோய்த் தொற்று ஒரு பெருந்தொற்றாக (பெண்டெமிக்) பரவி சுமார் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் அதனை பருவகால காய்ச்சல் போன்ற ஒரு வட்டார நோயாக (எண்டெமிக்) கருதி பல நாடுகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவி வருகின்றபோதும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் பொது வாழ்வில் கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளன.

இந்த வாரத்தில் கட்டுப்பாடுகளையும் தளர்த்தும் அறிவிப்பை டென்மார்க் வெளியிட்டுள்ளது.

“கொவிட் தொடர்ந்தும் சமூகத்திற்கு ஆபத்தானதாக கருதப்படமாட்டாது” என்று டென்மார்க் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸுடன் வாழ்வதற்கு சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் சில நாடுகளின் அரசியல் தலைமைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

“கொவிட் அழிந்துவிடாது. அது பல ஆண்டுகளுக்கு சில நேரம் எப்போதும் எம்முடனேயே இருந்துவிடும். அதனுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்” என்று பிரிட்டன் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவிட் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

“பெண்்டெமிக்கில் இருந்து எண்டெமிக் நிலைக்கு ஐரோப்பாவை நாம் வழிநடத்துகிறோம் என்று நினைக்கிறேன். கொவிட்டுடன் எவ்வாறு வாழ்வது என்பதை உலகுக்கு காட்டுவதில் நாம் முன்னணியில் உள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொவிட் தொற்றை ஒரு எண்டெமிக் நோயாக கையாள்வது முன்கூட்டியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸின் பரிணாமம் நிச்சயமற்றதாவும் உலக அளவில் இதன் தீவிரம் தொடர்ந்தும் நீடிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எண்டெமிக் எனும்போது இந்தத் தொற்று மக்களிடையே நிரந்தரமாக அல்லது சில ஆண்டுகளுக்கு காணப்படும். ஆனால் பாதிப்பின் தீவிரம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்காது.

எயிட்ஸ், மலேரியா போன்று கொவிட்–19 நோயும் மாறிவிடும். அவ்வப்போது சிலருக்கு வரும், போகும் என்ற நிலையில் இருக்கும்.

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை