கொவிட்-19: கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் பின்பற்றப்படுகின்றனவா? தொடர் கண்காணிப்பு

கொவிட்-19: கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் பின்பற்றப்படுகின்றனவா? தொடர் கண்காணிப்பு-Health Guidelines-Schools-Akkaraipattu

கொவிட்-19 பாடசாலை மாணவர் பாதுகாப்புத் தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் முறையான கவனம் செலுத்தப்படும். அத்துடன், பாடசாலைகள் தொடர் கண்காணிப்புக்குட்படுத்தப்படும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அரிகாரி டொக்டர் காதர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்று பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்திவரும் அதேவேளை, பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றோம்.

கொவிட்-19 பாடசாலை மாணவர் பாதுகாப்புத் தொடர்பில் கல்வி அமைச்சு அவ்வப்போது சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ளது. இச்சுற்றுநிருபங்கள் பாடசாலைகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் நாம் தொடர் கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

கொவிட்-19 மற்றும் டெங்கு நோய் பரவல் ஆகிய இரு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நோய் பரவுவதற்கு ஏதுவாக நடந்து கொள்பவர்கள் அல்லது சூழலை வைத்திருப்பவர்கள் அல்லது சுகாதார அமைச்சின் வழிகாட்டல், பணிப்புரையை மீறுபவர்களுக்கெதிராக தயவு, தாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த 2020 மார்ச் மாதம் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் முதல் கொவிட்-19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2020 நவம்பர் மாதம் அக்கரைப்பற்று சந்தைக் கொத்தணி உருவானது. ஆனால் அதனை 2021இல் முறையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. இதற்கு அக்கரைப்பற்றிலுள்ள அனைத்துத் தரப்பினர் வழங்கிய ஒத்துழைப்பே பிரதானமாகும்.

அதேபோன்று கடந்த 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால், பின்னர் 2021இல் கணிசமானளவு குறைவடைந்தது. இதற்கும் பொதுமக்களின் நிறைவான ஒத்துழைப்பே பிரதானமாகும்.

எங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, ஏனையவர்களையும் பாதுகாத்துக் கொள்வதே ஆரோக்கியமானதாகும் என்றார்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Sun, 01/09/2022 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை