நாடளாவிய மின் துண்டிப்பு குறித்து அரசு கவலை; எனினும் 10 நாட்களுக்கு மின்சார துண்டிப்பை தவிர்க்க முடியாது

  • நுரைச்சோலை இயந்திர கோளாறே நெருக்கடிக்கு காரணம்
  • எதிர்வரும் 20 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் ஏற்படக் கூடிய மின் துண்டிப்புக்கு கவலையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அரசாங்கம், நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கி இயந்திர கோளாறே இந்த நெருக்கடிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் கவலை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்வெட்டு தொடர்பாக ஆராயப்பட்டது.

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் பேசினார். மக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட அவர் பணித்துள்ளார். மின் வெட்டு தொடர்பில் மின்சார சபை அட்டவணையொன்றை வெளியிட்டுள்ளது. நுரைச்சோலை உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதால் அதனை திருத்த 09 அல்லது -10 நாட்களாகும். அதனை திருத்தும் வரை அதாவது 20 ஆம் திகதிவரை இந்த பிரச்சினை இருக்கும்.

திட்டமிட்ட அடிப்படையில் மின்வெட்டை அமுலாக்குவது தொடர்பில் மின்சார சபை மக்களை அறிவூட்டி வருகிறது. 10 நாட்களின் பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பும். ஆனால் அவசர நிலைமையில் மின்வெட்டு அமுலாகலாம்.

டொலர் நெருக்கடி காரணமாக பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதுடன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய கடன் சுமையிலுள்ளது. மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பிலும் சிக்கல் காணப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை ஊக்குவிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துப்பட்டுள்ளது. சூரியசக்தி திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டாலும் அவை முன்னெடுக்கப்படாதுள்ளன. அவை மெதுவாகவே செயற்படுத்தப்படுகின்றன.புதுப்பிக்கத்தக்க வலு சக்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அதில் இடையூறுகளும் காணப்படுகின்றன.

கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்துண்டிப்பு இயற்கையாக நடந்ததா, நாசகாரவேலையா என்பது குறித்து மின்சார சபை அறிவித்துள்ளது. மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறோம் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை