அமைதிக்கான நோபல் விருது வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்காவில் நிறவெறிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உதவியவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 ஆவது வயதில் நேற்று காலமானார்.

“மிகச்சிறந்த தென்னாபிரிக்கர்களின் தலைமுறை ஒன்றுக்கு எமது நாடு பிரியாவிடை கொடுக்கும் துயரத்தின் மற்றொரு அத்தியாயம்” என்று அவரது மறைவு பற்றி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவை பெற உதவியவராக பேராயர் டுட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1948 தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்காவில் இருந்த பெரும்பான்மை கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு மற்றும் கொள்கைகளை செயற்படுத்திய சிறுபான்மை வெள்ளையின ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர செயற்பட்டவர்களில் ஒருவராக டுட்டு உள்ளார். அவர் பாகுப்பாட்டுக்கு எதிராக போராடிய தலைவரான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவராவார்.

பாகுபாட்டு ஆட்சி முறையை ஓழித்த போராட்டத்தில் வகித்த பங்களிப்புக்காக அவருக்கு 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவின் பாகுபாட்டு யுகத்தின் கடைசி ஜனாதிபதி எப்.டபிள்யு. டி கிளர்ன் தனது 85 வயதில் மரணித்து சில வாரங்களிலேயே டுட்டுவின் மரணம் இடம்பெற்றுள்ளது.

டுட்டு “ஆன்மீகத் தலைவர் என்ற அடையாளமாகவும், இனவெறி பாகுபாட்டு எதிர்ப்பு செயற்பாட்டாளர் மற்றும் சர்வதேச மனித உரிமை பிரசாரகராகவும் இருந்தார்” என்றும் ஜனாதிபதி ரமபோசா தெரிவித்துள்ளார்.

கேப்டவுனின் முதலாவது கறுப்பின பேராயராக நியமிக்கப்பட்ட டுட்டு, தனது உயர் அந்தஸ்தை பயன்படுத்தி, கறுப்பின மக்கள் தனது சொந்தநாட்டில் ஒடுக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இனரீதியாகப் பிளவுற்றுப்போன நாட்டில் சமரசம் ஏற்படுத்த அவர் பாடுபட்டார்.

Mon, 12/27/2021 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை